எலான் மஸ்க்
சென்னை: மனித மூளையில் பொருத்தும் நியூராலிங்க் சிப் உற்பத்தியை நடப்பு ஆண்டில் (2026) அதிகரிக்க திட்டம் இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் உடலளவில் செயலிழந்தவர்களின் எண்ணங்களை செயல்படுத்தும் வகையில் மூளைக்கும், கணினிக்குமான இன்டெர்ஃபேஸ் (BCI) இணைப்பை உருவாக்கும் வகையிலான ‘சிப்’-ஐ மனித மூளையில் பொருத்தி சோதனையை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குரங்குகளை வைத்து இந்த சோதனையை நியூராலிங்க் நிறுவனம் செய்திருந்தது.
இதுவரை 12 பேருக்கு நியூராலிங்க் நிறுவனம் சிப் பொருத்தி உள்ளது. இதை அந்நிறுவனம் கடந்த நவம்பரில் தெரிவித்திருந்தது. கடந்த 2024-ல் நோலண்ட் அர்பாக் என்பவருக்கு முதல் சிப்-இனை நியூராலிங்க் நிறுவனம் பொருத்தியது. அந்த சிப்பை பொருத்திக் கொண்டதன் மூலம் தன் வாழ்வில் தான் சந்தித்த மாற்றங்களை கடந்த ஆகஸ்ட் மாதம் நோலண்ட் அர்பாக் பகிர்ந்திருந்தார்.
உடல் அசைவு செயலிழப்பால் பாதிக்கப்பட்ட தன்னால் கணினி, ஏர் பியூரிபையர், தொலைக்காட்சி உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை கட்டுப்படுத்த முடிவதாக அவர் அப்போது தெரிவித்திருந்தார். இந்நிறுவனத்தின் சிப் இந்த வகை பாதிப்பு கொண்ட மக்கள் டிஜிட்டல் சாதனங்களை கட்டுப்படுத்த உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“பிசிஐ சிப் உற்பத்தியை அதிகரிக்கும் பணியில் நியூராலிங்க் நிறுவனம் தொடங்கியுள்ளது. 2026-ல் தானியங்கி அறுவை சிகிச்சை முறையில் சிப் பொருத்தும் பணியை மேற்கொள்ளும் திட்டம் உள்ளது. இந்த சிப்களை பொருத்த பயன்படுத்தும் த்ரெட்களை அகற்ற வேண்டியதில்லை” என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.