விளையாட்டு

நாக் அவுட் சுற்றில் எகிப்து அணிக்கு முதல் வெற்றி: பெனால்டி ஷுட் அவுட்டில் ஆஸி.யை வென்றது | FIFA WC 2026

செய்திப்பிரிவு

ஆர்லிங்டன்: பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் நேற்று அமெரிக்​கா​வின் ஆர்​லிங்​டனில் நடை​பெற்ற நாக் அவுட் சுற்று ஆட்​டத்​தில் எகிப்து - ஆஸ்​திரேலியா அணி​கள் மோதின. ஆட்​டத்​தின் 13-வது நிமிடத்​தில் முகமது சாலா​வின் சாதுரிய​மான ஃப்​ரீ-கிக் ஃபிளிக் இமாம் அஷூரை நோக்​கிப் பாய, அவர் அடித்த ஷாட்டை ஆஸ்​திரேலிய டிஃபென்ஸ் முழு​மை​யாகக் கிளியர் செய்யத் தவறியது.

இதனால் பாக்​ஸின் வலதுபுறம் சென்ற பந்தை ஹாஃபெஸ், பேக்​-​போஸ்ட்​டில் நின்​றிருந்த இமாம் அஷூரை நோக்கி பிர​மாத​மான கிராஸை காற்​றில் அடித்​தார். எழும்பி வந்த பந்தை இமாம் அஷூர் தலை​யால் முட்டி கோல் வலைக்​குள் திணித்​தார். இதனால் எகிப்து 1-0 என முன்​னிலை பெற்​றது.

55-வது நிமிடத்​தில் ஆஸ்​திரேலி​யா​வின் இடது பக்​க​வாட்​டில் ஓ’நீலை, எகிப்து அணி​யின் ஜிகோ கீழே தள்​ளி​விட்​டார். இதனால் ஆஸ்​திரேலிய அணிக்கு ஃப்​ரீ-கிக் வழங்​கப்​பட்​டது. இதில், ஓ’நீல், பெனால்டி பாக்​ஸிற்​குள் அடித்த பந்தை எகிப்து வீரர் முகமது ஹானி காற்​றில் உயர​மாக எழும்​பி, பந்​தைத் தட்​டி​விட முயன்​றார். ஆனால், துர​திர்​ஷ்ட​வச​மாக அது சுய கோலாக மாறியது.

இதனால் ஆட்​டம் 1-1 என்ற கோல் கணக்​கில் சமநிலையை எட்​டியது. நிர்​ண​யிக்​கப்​பட்ட 90 நிமிடங்​களின் முடி​விலும் இதே நிலையே நீடித்​தது. இதன் பின்​னர் வழங்​கப்​பட்ட 30 நிமிடங்​கள் கூடு​தல் நேரத்​தி​லும் இரு அணி​கள் தரப்​பில் மேற்​கொண்டு கோல் ஏதும் அடிக்​கப்​பட​வில்​லை. இதனால் வெற்​றியை தீர்​மானிக்க பெனால்டி ஷுட் அவுட் முறை கடைபிடிக்​கப்​பட்​டது.

இதில் எகிப்து 4-2 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது. அந்த அணி தரப்​பில் மஹ்மூத் சாபர், ராமி ரபி​யா, முகமது சாலா, ஹொசாம் அப்​தெல்​மகித் ஆகியோர் கோல் அடித்து அசத்​தினர். ஆஸ்​திரேலிய அணி தரப்​பில் முதல் வாய்ப்​பில் ஹாரி சவுட்​டர் அடித்த பந்து கோல் கம்​பத்​துக்கு மேலாக சென்​றது. அந்த அணி​யின் அடுத்த இரு வாய்ப்​பு​களில் ஜேக்​சன் இர்​வின், மாபில் கோல் அடித்​தனர். 4-வது வாய்ப்​பில் லூகாஸ் பெரிங்​டன் அடித்த பந்து கோல் கம்​பத்​தில் பட்டு வெளியே வென்​றது.

உலகக் கோப்பை வரலாற்​றில் முதன்​முறை​யாக நாக் அவுட் சுற்​றில் கால்​ப​தித்து இருந்த எகிப்து அணி ஆட்​டத்தை வெற்​றிகர​மாக முடித்​துள்​ளது. வரும் 6-ம் தேதி நடை​பெறும் ரவுண்ட் ஆஃப் 16 சுற்​றில் நடப்பு சாம்​பிய​னான அர்​ஜெண்​டி​னா​வுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது எகிப்து அணி.

ஒரே தொடரில் 2 சுய கோல்​கள்

நடப்பு உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் ஆஸ்​திரேலிய அணிக்கு எதி​ரான நாக் அவுட் சுற்று ஆட்​டத்​தில் 55-வது நிமிடத்​தில் எகிப்து அணி​யின் முகமது ஹானி சுய கோல் அடித்​தார். முன்​ன​தாக லீக் சுற்​றில் பெல்​ஜி​யம் அணிக்கு எதி​ரான 1-1 என்ற டிரா ஆட்​டத்​தி​லும் முகமது ஹானி சுய கோல் அடித்​திருந்​தார். இதன் மூலம் ஒரே தொடரில் 2 சுய கோல்​கள் அடித்த முதல்​ வீரர்​ என்​ற மோச​மான சாதனையை படைத்​தார்​ முகமது ஹானி.

SCROLL FOR NEXT