வைபவ் சூர்யவன்ஷி
சென்னை: சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கும் துலீப் டிராபி கிரிக்கெட் இறுதிப் போட்டியில் கிழக்கு மண்டலம் - தென் மண்டலம் அணிகள் மோதுகின்றன. வைபவ் சூர்யவன்ஷி, தேவ்தத் படிக்கல், திலக் வர்மா, முகமது சிராஜ் ஆகியோர் களமிறங்குவதால் இந்த போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
திலக் வர்மா தலைமையிலான தென் மண்டலம் அணி அரை இறுதியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வடக்கு மண்டலம் அணியை வீழ்த்தியிருந்தது. இறுதிப் போட்டியையொட்டி தேவ்தத் படிக்கல், முகமது சிராஜ் ஆகியோர் அணியில் இணைந்துள்ளனர். இது அந்த அணிக்கு கூடுதல் வலுசேர்க்கக்கூடும். தேவ்தத் படிக்கல் கடந்த மாதம் இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2 சதங்கள் விளாசி அசத்தியிருந்தார். அதே பார்மை அவர், துலீப் டிராபி இறுதிப் போட்டியில் தொடரச் செய்வதில் முனைப்பு காட்டக்கூடும்.
அரை இறுதி ஆட்டத்தில் திலக் வர்மா முதல் இன்னிங்ஸில் 116* ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 51 ரன்களும் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார். இதனால் அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல் திறன் வெளிப்படக்கூடும். தேவ்தத் படிக்கல் களமிறங்குவதால் கே.எல்.ராகுல் இந்த போட்டியில் விளையாடவில்லை. இதன் காரணமாக அரை இறுதிப் போட்டிக்குப் பின்னர் அவர், தென் மண்டல அணியுடன் பயணிக்கவில்லை.
பந்து வீச்சு துறையில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் வித்வத் கவேரப்பாவுக்குப் பதிலாக அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முகமது சிராஜ் 4 இன்னிங்ஸ்களிலும் 135 கி.மீ வேகத்தைத் தொடவே சிரமப்பட்டிருந்தார். வரவிருக்கும் நியூஸிலாந்து சுற்றுப்பயணத்தை கருத்தில் கொண்டு முகமது சிராஜ் மீண்டும் ஃபார்மிற்குத் திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும்.
இஷான் கிஷன் தலைமையிலான கிழக்கு மண்டலம் அணி அரை இறுதி ஆட்டத்தில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் மத்திய மண்டலம் அணியை வென்றிருந்தது. இளம் அதிரடி வீரரான வைபவ் சூர்யவன்ஷி அரை இறுதி ஆட்டத்தில் முறையே 92 மற்றும் 40 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு உதவியிருந்தார்.
இறுதிப் போட்டியில் அவர், சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான வீரர் என்ற தரநிலையை சூர்யவன்ஷி எட்டக்கூடும்.
பந்துவீச்சு துறையில் அனுபவம் வாய்ந்த முகமது ஷமி, முகேஷ் குமார் ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும். சுழற்பந்து வீச்சில் அனுகுல் ராய், ஸ்ரேயஸ் கோபால் உறுதுணையாக இருக்கக்கூடும். இந்த போட்டி முகமது ஷமிக்கு முதல் தர விளையாட்டில் 100-வது ஆட்டமாகும்.
முகமது ஷமி முதல் தர, லிஸ்ட் ஏ மற்றும் டி20 போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 903 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இந்திய அணிக்காக ஷமி, கடைசியாக கடந்த மார்ச் 2025-ல் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் விளையாடி இருந்தார்.
துலீப் டிராபியில் பல தருணங்களில், 36 வயதான முகமது ஷமி தனது அனல் பறக்கும் பந்துவீச்சின் மூலம், தன்னிடம் இன்னும் விளையாடும் திறன் எஞ்சியுள்ளது என்பதை வெளிப்படுத்தியிருந்தார். ஒருவேளை, துலீப் டிராபி இறுதிப் போட்டியில் அவர், தாக்கத்தை ஏற்படுத்தினால் இந்திய அணிக்குள் மீண்டும் நுழைவதற்கான வாய்ப்பு கிடைக்கக்கூடும்.