விளையாட்டு

சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைக்குமா இந்திய அணி? - நியூஸிலாந்துடன் இன்று பலப்பரீட்சை | T20 WC Final

கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.27.48 கோடி பரிசு

செய்திப்பிரிவு

அகமதாபாத்: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அரை இறுதி ஆட்டத்தில் 253 ரன்கள் குவித்த போதிலும் கடைசி ஓவர் வரை போராடி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. சஞ்சு சாம்சன் 87 ரன்களை விளாசி அணியின் வெற்றிக்கு உதவியிருந்தார். பந்துவீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா இறுதிக்கட்ட ஓவர்களில் தனது துல்லியமான யார்க்கர் களால் பலம் சேர்த்திருந்தார்.

          

மேலும் இந்திய அணியின் பீல்டிங்கும் வியக்கும் வகையில் இருந்தது. அதிலும் அக்சர் படேல் 2 கேட்ச்களுக்காக செய்த சாகசம் அற்புதமாக இருந்தது. கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா பீல்டிங்கில் காட்டிய உத்வேகமும் (ஜேக்கப் பெத்தேல் ரன் அவுட்) வெற்றிக்கு முக்கிய பங்களிப்பாக இருந்தது.

பேட்டிங்கை பொறுத்தவரையில் சஞ்சு சாம்சன் கடந்த இரு ஆட்டங்களிலும் அற்புதமாக விளையாடினார். இந்திய இறுதிப் போட்டியில் கால்பதித்ததில் அவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. சிறந்த பார்மில் உள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு உயர்மட்ட செயல்திறன் வெளிப்படக்கூடும். அபிஷேக் சர்மா தனது பலவீனத்தில் இருந்து மீண்டு வருவதில் கவனம் செலுத்தினால் இந்திய அணியின் பலம் மேலும் அதிகரிக்கும்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா ஒரே மாதிரியான பந்துகளில், ஒரே வகையிலான ஷாட்களை மேற்கொண்டு பலமுறை ஆட்டமிழந்துள்ளது கவலையை அதிகரித்துள்ளது. எனினும் இறுதிப் போட்டி என்பதால் அவரை, நிச்சயம் அணியில் இருந்து நீக்குவதற்கான வாய்ப்புகள் குறைவுதான். தொழில்நுட்ப ரீதியாக தனது மட்டை வீச்சில் அவர், மாறுதல்களை செய்து அதிரடி பாதைக்கு திரும்புவதற்கு முயற்சி செய்யக்கூடும். ஒருவேளை அபிஷேக் சர்மா நீக்கப்பட்டால் பேட்டிங்கை பலப்படுத்தும் வகையில் ரிங்கு சிங் விளையாடும் லெவனில் சேர்க்கப்படக்கூடும்.

இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே ஆகியோரும் தங்களது அதிரடியால் பலம் சேர்க்கக்கூடியவர்கள். இந்த பேட்டிங் வரிசை நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சு துறைக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும். சமீபகாலமாக நியூஸிலாந்து அணியினர் இந்திய சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க வருண் சக்ரவர்த்தி கடந்த சில ஆட்டங்களாக அதிக அளவிலான ரன்களை விட்டுக்கொடுத்து வருகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதியில் வருண் சக்ரவர்த்தி 64 ரன்களை தாரை வார்த்திருந்தார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் அல்லது முகமது சிராஜ் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.

மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணி அரை இறுதியில் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. அந்த ஆட்டத்தில் 170 ரன்கள் இலக்கை நியூஸிலாந்து அணி 12.5 ஓவர்களை எட்டி வெற்றி கண்டிருந்தது. தொடக்க வீரரான ஃபின் ஆலன் 33 பந்துகளில் 100 ரன்கள் விளாசி மிரட்டியிருந்தார். மற்றொரு தொடக்க வீரரான டிம் ஷெய்பர்ட் 33 பந்துகளில் 58 ரன்கள் விளாசியிருந்தார்.

இந்த ஜோடி நடப்பு உலகக் கோப்பை தொடரில் பெரும்பாலும் அதிரடியான தொடக்கம் அமைத்து கொடுத்துள்ளது. கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல் ஆகியோர் நடுவரிசையிலும் மிட்செல் சாண்ட்னர், கோல் மெக்கோன்ஜி ஆகியோர் பின்வரிசையிலும் பேட்டிங்கில் பலம் சேர்க்கக் கூடியவர்கள்.

பந்துவீச்சை பொறுத்தவரையில் மேட் ஹென்றி, லாக்கி பெர்குசன், ஜேம்ஸ் நீஷாம் ஆகியோர் தங்களது சீரான வேகத்தால் இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும். சுழற்பந்து வீச்சை பொறுத்தவரையில் மிட்செல் சாண்ட்னர், கோல் மெக்கோன்ஜி சவால் அளிக்கக்கூடும். இவர்களுக்கு உறுதுணையாக கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் செயல்படக்கூடும்.

இந்திய அணி 4-வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. 2007 மற்றும் 2024-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணி 2014-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் இலங்கையிடம் தோல்வி அடைந்து இருந்தது. அதேவேளையில் நியூஸிலாந்து அணி 2-வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது. அந்த அணி கடந்த 2021-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்து இருந்தது.

முதல் முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் நியூஸிலாந்து அணி களமிறங்கும் நிலையில், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் இந்திய அணி களம் காண்கிறது. ஏனெனில் இதுவரை எந்த அணியும் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது இல்லை.

இறுதிப் போட்டியில் வெற்றி பெற, நிறைய துணிச்சல் தேவை, ஆனால் அதிர்ஷ்டமும் இல்லாமல் இருக்க முடியாது. இந்த வகையில் அது ஒரு சரியான ஆட்டமாக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் சரியான நேரத்தில் சரியான விஷயங்கள் நடக்க வேண்டும்.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினால் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட முதல் அணி என்ற சாதனையையும், 3-வது முறையாக மகுடம் சூடிய முதல் அணி என்ற பெருமையையும் பெறும். ஏனெனில் இதுவரை எந்த அணியும் 3 முறை கோப்பையை வென்றது இல்லை.

சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் ரூ.27.48 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிக்கும் அணி ரூ.14.65 கோடியை பெறும்.

11 வருடம்.. 5 முறை..

நியூஸிலாந்து அணி கடந்த 11 வருடங்களாக ஐசிசி நடத்தும் தொடர்களில் 5 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. இதில் அந்த அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மட்டுமே பட்டம் வென்றது. 50 ஓவர், டி20 வடிவிலான போட்டிகளில் அந்த அணி 2-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. இந்த சோகத்துக்கு தீர்வு காண அந்த அணி இம்முறை முயற்சிக்கக்கூடும்.

சிறப்பு ரயில்: ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியையொட்டி டெல்லியில் இருந்து அகமதாபாத்துக்கு சிறப்பு ரயிலை இயக்க வடக்கு ரயில்வே நடவடிக்கை எடுத்திருந்தது. இந்த வகையில் நேற்று இரவு 11.45 மணிக்கு டெல்லியில் இருந்து சிறப்பு ரயில் அகமதாபாத் புறப்பட்டது. இதில் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் பயணித்தனர். இந்த ரயில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு சபர்மதி சென்றடையும்.

5-ல் 2 வெற்றிகள்: ஐசிசி தொடரின் நாக் அவுட் ஆட்டங்களில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் இந்தியா 2 முறையும், நியூஸிலாந்து அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் கடைசியாக நடைபெற்ற 2 நாக் அவுட் ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி கண்டிருந்தது.

ஒரே வருடத்தில் 2-வது முறை: ஐசிசி தொடரின் இறுதி ஆட்டத்தில் ஒரே ஆண்டில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் 2-வது முறையாக நேருக்கு நேர் மோத உள்ளன. கடந்த பிப்ரவரி-மார்ச் மாதத்தில் துபாயில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நியூஸிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றிருந்தது.

வருண் சக்ரவர்த்தி நீக்கமா? இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறும்போது, “வருண் சக்ரவர்த்தியின் பார்ம் கவலை அளிக்கும் வகையில் இல்லை. போட்டியில் வெற்றி பெறுவதிலேயே நாங்கள் கவனம் செலுத்துகிறோம். வருண் சக்ரவர்த்தி உலகின் முதல் நிலை பந்துவீச்சாளர். இந்த அணியை எப்படி வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதை அவர், அறிவார். நாங்கள் விஷயங்களை எளிதாக வைத்திருக்க விரும்புகிறோம். விஷயங்களை சிக்கலாக்க விரும்பவில்லை. என்னை பொறுத்தவரையில் 6 வருட பயணம் சிறப்பாகவே உள்ளது. பெரிய அளவிலான இறுதிப் போட்டியில் இந்திய அணியை வழிநடத்த கிடைத்த வாய்ப்பு சிறப்பு வாய்ந்தது” என்றார்.

அகமதாபாத் ஆடுகளம் எப்படி? டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்துக்கு பயன்படுத்தப்படும் ஆடுகளம் நடப்பு தொடரில் ஒரே ஒரு ஆட்டத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆடுகளம் மும்பை வான்கடேவில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்துக்கு பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் போன்றே இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக 499 ரன்கள் குவிக்கப்பட்டிருந்தன.

இறுதிப் போட்டி நடைபெறம் நரேந்திர மோடி மைதானத்தில் பந்துகள் குறைந்த அளவிலேயே திரும்பக்கூடும். ஆனால் அதேவேளையில் சீரான வேகம், பவுன்ஸ் இருக்கக்கூடும் என கருதப்படுகிறது. ஆடுகளம் சிவப்பு மற்றும் கருப்பு மண் கலவை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடுகளத்தில் 200 ரன்கள் வரை குவிக்க முடியும்.

கடந்த 9-ம் தேதி இந்த ஆடுகளத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கனடா அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா 213 ரன்களை வேட்டையாடி இருந்தது. அகமதாபாத்தில் நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 2 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்திருந்தது.

லீக் சுற்றில் நெதர்லாந்துக்கு எதிராக 193 ரன்கள் குவித்த இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதேவேளையில் சூப்பர் 8 சுற்றில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 187 ரன்களை துரத்திய போது 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்ந்திருந்தது. நியூஸிலாந்து இந்த மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. அந்த ஆட்டத்தில் 177 ரன்கள் இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா 17 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டிருந்தது.

‘இதயங்களை உடைப்போம்’: நியூஸிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் கூறும்போது, “உலகக் கோப்பை இறுதிப்போட்டி என்பதால் ஆர்வம் மிகுதியாக இருக்கிறது. ஆடுகளம் தட்டையாகவும் அதிக ரன்களைக் குவிக்கும் வகையில் இருக்கும் என நினைக்கிறேன். ஜஸ்பிரீத் பும்ரா குறித்துதான் அனைவரும் பேசி வருகிறார்கள். அந்தளவுக்கு அவர், சிறப்பாக செயல்பட்டுள்ளார். நாங்கள் ஓர் அணியாக வேலையைச் செய்கிறோம். இந்த முறையும் அதில் வித்தியாசம் இருக்காது. ரசிகர்களுக்கு நாங்கள் விருப்பமானவர்களாக இருக்க மாட்டோம் என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும். அது எங்களுக்கு கவலையில்லை. ஆனால் கோப்பையை வெல்வதற்காக சில இதயங்களை உடைப்பதில் எனக்கு கவலையில்லை” என்றார்.

SCROLL FOR NEXT