விளையாட்டு

209 ரன்​கள் குவித்​தும் வெற்றி பெற முடிய​வில்லை - சேப்பாக்கத்திலும் சிஎஸ்கே அணி தோல்வி!

பெ.மாரிமுத்து

சென்னை: ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்கே, பஞ்​சாப் கிங்ஸ் அணி​யுடன் மோதி​யது. டாஸ் வென்ற பஞ்​சாப் அணி பீல்​டிங்கை தேர்வு செய்​தது. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணிக்கு தொடக்​கமே அதிர்ச்​சி​யாக அமைந்தது.

சஞ்சு சாம்​சன் 7 பந்​துகளில், ஒரு பவுண்​டரி​யுடன் 7 ரன்​கள் எடுத்த நிலை​யில் சேவியர் பார்ட்​லெட் பந்​தில் விக்​கெட் கீப்​பர் பிரப்​சிம்​ரனிடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார். இதையடுத்து களமிறங்​கிய ஆயுஷ் மாத்ரே மட்​டையை சுழற்​றி​னார். சேவியர் பார்ட்​லெட் வீசிய 4வது ஓவரில் 3 பவுண்​டரி​கள் விரட்​டி​னார். அதிரடி​யாக விளை​யாடிய ஆயுஷ் மாத்ரே 29 பந்​துகளில், சிக்​ஸர்​கள், 4 பவுண்டரிகளுடன் அரை சதம் விளாசி​னார். ஆயுஷ் மாத்ரே அதிரடி​யால் சிஎஸ்கே அணி 10 ஓவர்​களில் 101 ரன்களை குவித்​தது.

          

மறு​புறம் நிதான​மாக விளை​யாடிய ருது​ராஜ் கெய்க்​வாட் 22 பந்​துகளில், 2 பவுண்​டரி​களு​டன் 28 ரன்​கள் எடுத்த நிலையில் யுவேந்​திர சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஷிவம் துபே களமிறங்​கி​னார். சிறப்​பாக பேட் செய்து வந்த ஆயுஷ் மாத்ரே 43 பந்​துகளில், 5 சிக்ஸர்கள், 6 பவுண்​டரி​களு​டன் 73 ரன்​கள் எடுத்த நிலையில் விஜயகு​மார் வைஷாக் பந்​தில் ஷார்ட் தேர்டுமேன் திசை​யில் நின்ற யுவேந்​திர சாஹலிடம் பிடி​கொடுத்து ஆட்​ட​மிழந்​தார்.

இதன் பின்​னர் களமிறங்​கிய கார்த்​திக் சர்மா 1 ரன்​னில் மார்கோ யான்​சன் பந்​தில் எல்​பிடபிள்யூ முறை​யில் ஆட்டமிழந்து ஏமாற்​றம் அளித்​தார். இதையடுத்து களமிறங்​கிய சர்ஃப​ராஸ் கான் தாக்​குதல் ஆட்​டம் மேற்கொண்​டார். அர்​ஷ்தீப் சிங் வீசிய 15-வது ஓவரில் சர்ஃப​ராஸ் கான் 3 பவுண்​டரி​களை விளாசி​னார். தொடர்ந்து சேவியர் பார்ட்​லெட் வீசிய அடுத்த ஓவரில் டீப் பேக்​வேர்டு ஸ்கொயர் திசை​யில் சிக்​ஸர் பறக்​க​விட்டு அசத்​தி​னார் சர்ஃப​ராஸ் கான்.

விஜயகு​மார் வைஷாக் வீசிய 17-வது ஓவரின் முதல் 3 பந்துகளில் தொடர்ச்​சி​யாக பவுண்​டரி​கள் விரட்​டிய சஃர்பராஸ் கான் 4வது பந்​தில் மிட் ஆன் திசை​யில் விளாசிய போது நேகல் வதே​ரா​விடம் கேட்ச் ஆனது. 12 பந்துகளை சந்​தித்த சர்ஃப​ராஸ் கான் ஒரு சிக்​ஸர், 6 பவுண்டரி​களு​டன் 32 ரன்​கள் விளாசி​னார். இதைத் தொடர்ந்து இறு​திக்​கட்ட ஓவர்​களில் ஷிவம் துபே அதிரடியாக விளை​யாடி​னார்.

மார்கோ யான்​சன் வீசிய 18-வது ஓவரின் பந்தை ஷிவம் துபே டீப் மிட்விக்​கெட் திசை​யில் சிக்​ஸருக்கு பறக்கவிட்டார். சேவியர் பார்ட்​லெட் வீசிய அடுத்த ஓவரில் 3 பவுண்​டரி​களை​யும், அர்​ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரில் 3 பவுண்​டரி​களை​யும் விரட்டி அசத்​தி​னார் ஷிவம் துபே. இதனால் 20 ஓவர்​களில் சிஎஸ்கே அணி 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 209 ரன்​கள் குவித்​தது.

ஷிவம் துபே 27 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 5 பவுண்டரிகளுடன் 45 ரன்​களும், பிர​சாந்த் வீர் 7 பந்​துகளில், ஒரு பவுண்​டரி​யுடன் 7 ரன்​களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்​தனர். 210 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த பஞ்​சாப் அணிக்கு பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்சிம்​ரன் சிங் ஜோடி அதிரடி தொடக்​கம் கொடுத்​தது. கலீல் அகமது வீசிய முதல் ஓவரில் பிரியன்ஷ் ஆர்யா தலா ஒரு சிக்​ஸர், பவுண்​டரி அடித்​தார்.

மேட் ஹென்றி வீசிய அடுத்த ஓவரில் பிரியன்ஷ் ஆர்யா 2 பவுண்​டரி​களை​யும், ஒரு சிக்​ஸரை​யும் பறக்​க​விட்​டார். பிரப்​சிம்​ரன் சிங் தனது பங்​குக்கு பவுண்​டரி ஒன்றை அடிக்க இந்த ஓவரில் 20 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. அன்​ஷுல் கம்​போஜ் வீசிய 4-வது ஓவரில் பிரப்​சிம்​ரன் சிங் 3 பவுண்​டரி​கள் விரட்​டி​னார். மட்​டையை சுழற்​றிய பிரியன்ஷ் ஆர்யா 11 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 3 பவுண்டரிகளு​டன் 39 ரன்​கள் விளாசிய நிலை​யில் மேட் ஹென்றி பந்​தில் போல்​டா​னார்.

முதல் விக்​கெட்​டுக்கு பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன் சிங் ஜோடி 4.2 ஓவர்​களில் 61 ரன்​கள் குவித்​தது. இதையடுத்து கூப்​பர் கானொலி களமிறங்​கி​னார். சீராக ரன்​கள் சேர்த்து வந்த பிரப்​சிம்​ரன் சிங் 34 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 6 பவுண்டரி​களு​டன் 43 ரன்​கள் எடுத்த நிலை​யில் சர்ஃப​ராஸ் கான்​-ருது​ராஜ் கெய்க்​வாட்​டின் கூட்​ட​ணி​யால் ரன் அவுட் செய்​யப்​பட்​டார். இதையடுத்து கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்​கி​னார். 10 ஓவர்​களில் பஞ்​சாப் அணி 103 ரன்​கள் குவித்​தது.

கூப்​பர் கானொலி 22 பந்​துகளில், 6 பவுண்​டரி​களு​டன் 36 ரன்​கள் எடுத்த நிலை​யில் அன்​ஷுல் கம்​போஜ் பந்தைலாங் ஆஃப் திசை​யில் விளாசிய போது மேட் ஹென்றி​யிடம் கேட்ச் ஆனது. இதையடுத்து நேகல் வதேரா களமிறங்​கி​னார். 16 ஓவர்​களில் பஞ்​சாப் அணி 3 விக்​கெட்​கள் இழப்​புக்​கு 177 ரன்​கள்​ குவித்​திருந்​தது. அந்​த அணி​யின்​ வெற்​றிக்​கு கடைசி 4 ஓவர்​களில்​ 33 ரன்​கள்​ தேவையாக இருந்தன.

அ​திரடி​யாக விளை​யாடிய ஸ்ரேயஸ் ஐயர் 29 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 50 ரன்​கள் விளாசிய நிலை​யில் அன்​ஷுல் கம்​போஜ் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். அப்​போது அணி​யின் வெற்​றிக்கு 18 பந்​துகளில், 24 ரன்​கள் தேவை​யாக இருந்​தன. மேட் ஹென்றி வீசிய 18-வது ஓவரின் முதல் பந்​தில் வதேரா (10) ஆட்​ட​மிழந்​தார்.

இதைத் தொடர்ந்து ஷசாங் சிங் 14 ரன்​களும், மார்​கஸ் ஸ்டோனிஸ் 9 ரன்​களும் சேர்க்க பஞ்​சாப் கிங்ஸ் அணி 18.4 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 210 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. பஞ்​சாப் அணிக்கு எதி​ராக சிஎஸ்கே அணி 200+ ரன்​கள் குவித்து தோல்வி அடைவது இது 5-வது முறை​யாகும். 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற பஞ்​சாப் அணிக்கு இது 2-வது வெற்​றி​யாக அமைந்தது. அந்த அணி முதல் ஆட்​டத்​தில் குஜ​ராத் அணியை வீழ்த்​தி​யிருந்​தது.

அதேவேளை​யில் சிஎஸ்​கேவுக்கு இது 2-வது தோல்​வி​யாக அமைந்​தது. சிஎஸ்கே தனது முதல் ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் அணி​யிடம் 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்ந்து இருந்​தது.

பிரியன்ஸ் ஆர்யா ஆட்ட நாயகன்

சிஎஸ்கே அணி தனது அடுத்த ஆட்​டத்​தில் நாளை (5-ம் தேதி) பெங்​களூரு​வில் ஆர்​சிபி அணி​யுடன்​ மோதுகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியின் தொடர்ச்சியான 5-வது தோல்வியாகவும் இது அமைந்தது. ஆட்ட நாயகனாக பஞ்சாப் அணியின் பிரியன்ஸ் ஆர்யா தேர்வானார்.

31 ஆயிரம் ரசிகர்கள்

போட்டியை காண மைதானத்தில் சுமார் 31,363 ரசிகர்கள் குவிந்து இருந்தனர்.

பந்துவீச அதிக நேரம்

சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரத்தை பந்துவீசுவதற்கு பஞ்சாப் அணி எடுத்துக் கொண்டதால் அந்த அணிக்கு கடைசி 2 ஓவர்களில் வெளிவட்ட பீல்டிங்கில் 4 பீல்டர்களை மட்டுமே நிறுத்த அனுமதி வழங்கப்பட்டது.

இது முதல்முறை

சிஎஸ்கே அணியின் விளையாடும் லெவனில் 2 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே (நூர் அகமது, மேட் ஹென்றி) இடம் பெற்று இருந்தனர். ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணியில் இது போன்று நிகழ்வது இதுவே முதன்முறை.

6வது முறையாக 200+ ஸ்கோர்

சிஎஸ்கே அணி 209 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணிக்கு எதிராக சிஎஸ்கே 200+ ரன்களை குவிப்பது இது 6வது முறையாகும். இதன் மூலம் பஞ்சாப் அணிக்கு எதிராக 200+ ரன்களை அதிக முறை குவித்த அணி என்ற சாதனையை ஆர்சிபி அணியுடன் பகிர்ந்து கொண்டுள்ளது சிஎஸ்கே அணி.

51 வைடுகள்

ஐபிஎல் தொடரில் 2024 ஆண்டு முதல் இதுவரை பஞ்சாப் வீரர் அர்ஷ்தீப் 51 வைடுகளை வீசியுள்ளார். இந்த வகையில் அதிக வைடுகளை வீசியவர்களின் பட்டியலில் முகமது சிராஜுடன் இணைந்துள்ளார்.

SCROLL FOR NEXT