ஷாய் ஹோப், கெவின் பீட்டர்சன்
லண்டன்: ஷாய் ஹோப்பை ஐபிஎல் மினி ஏலத்தில் எடுக்க கடும் போட்டி இருக்கும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தற்போது ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
ராஞ்சியில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு இந்திய அணி 250 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இந்த இலக்கை மேற்கு இந்தியத் தீவுகள் அணி எட்டி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அந்த அணியின் கேப்டன் ஷாய் ஹோப் அமைந்தார். தொடக்க வீரராக களம் இறங்கிய ஷாய் ஹோப் 45 பந்துகளில் 102 ரன் (6 பவுண்டரி, 9 சிக்ஸர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். லக்னோவில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்திலும் அவர் 52 ரன்கள் எடுத்தார்.
இதுதொடர்பாக கெவின் பீட்டர்சன் கூறியதாவது: ஐபிஎல் மினி ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என நினைக்கிறேன்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் தனது பெயரை ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்தால் அவரை ஏலத்தில் எடுப்பதற்கு கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
இந்தியாவுக்கு எதிரான தொடரில் அவர் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். குறிப்பாக 2-வது டி20 ஆட்டத்தில் அவர் எடுத்த சதம் மிகவும் அபாரமானது. மிகச்சிறந்த இன்னிங்ஸை அவர் அன்று விளையாடினார். அதனால் அவரை மினி ஏலத்தில் எடுப்பதற்கு அனைவரும் விரும்புவர். இவ்வாறு கெவின் பீட்டர்சன் தெரிவித்தார்.