சென்னை: நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் நிதிஷ் ராணாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் சிஎஸ்கே- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் சிஎஸ்கே 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி பேட்டிங் செய்தபோது 19-வது ஓவரை சிஎஸ்கே வீரர் ஜேமி ஓவர்டன் வீசினார்.
இதில் ஒரு பந்தை, வைடு பந்து என நடுவர் அறிவித்தார். ஆனால், அதை எதிர்த்து சிஎஸ்கே அணி ரிவியூவ் கேட்டது. அந்த நேரத்தில் பேட்டிங் கிளவுஸ் (கையுறை) ஈரமாக இருக்கிறது. இதனால் மாற்று கிளவுஸ் கொண்டு வருமாறு களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் கேட்டார்.
களத்துக்கு வெளியே இருந்த டெல்லி கேபிடல்ஸ் வீரர் நிதிஷ் ராணா, பேட்டிங் கிளவுஸை மைதானத்துக்குள் கொண்டு செல்ல முயன்றார். ஆனால், அவரை நடுவர் தடுத்து நிறுத்தினார். இந்நிலையில் அடுத்த பந்திலேயே ஸ்டப்ஸ் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஸ்டப்ஸ் களத்திலிருந்து விரக்தியில் வெளியேறினார். இதைத் தொடர்ந்து டெல்லி வீரர் நிதிஷ் ராணா, நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நிதிஷ் ராணாவின் நடத்தை, ஐபிஎல் நன்னடத்தை விதி 2.3-ஐ மீறுவதாகும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து அவருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவீதத்தை அபராதமாக ஐபிஎல் நிர்வாகம் விதித்துள்ளது. அத்துடன் போட்டி தடைக்கான ஒரு புள்ளியையும் வழங்கியுள்ளது. இந்நிலையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு, அபராதத்தை நிதிஷ் ராணா ஏற்றுக் கொண்டுள்ளார்.