டெல்லி கேபிடல்ஸ் வீரர் சமீர் ரிஸ்வி

 
விளையாட்டு

மும்பை பந்துவீச்சை துவம்சம் செய்த ரிஸ்வி: 6 விக்கெட்டுகளில் டெல்லி வெற்றி - IPL 2026

வேட்டையன்

புதுடெல்லி: நடப்பு ஐபிஎல் சீசனின் 8-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை டெல்லி கேபிடல்ஸ் வீரர் சமீர் ரிஸ்வி துவம்சம் செய்தார்.

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரியான் ரிக்கல்டன் மற்றும் ரோஹித் சர்மா இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். ரிக்கல்டன் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த திலக் வர்மா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

          

மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்த ரோஹித், சூர்யகுமார் யாதவ் ஜோடி, 53 ரன்கள் சேர்த்தது. ரோஹித், 26 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ரூதர்போர்ட் 5, சூர்யகுமார் யாதவ் 51, நமன் திர் 28 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தனர். 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. சான்ட்னர் 18, கார்பின் போஷ் 11 ரன்கள் எடுத்திருந்தனர். இந்த ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக சூர்யகுமார் யாதவ் மும்பை அணியை கேப்டனாக வழிநடத்தினார்.

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை டெல்லி அணி விரட்டியது. ராகுல் 1, நிதிஷ் ராணா 0 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். அதன் பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்கு பதும் நிசாங்காவுடன் கூட்டு சேர்ந்த சமீர் ரிஸ்வி சிறப்பாக ஆடினார். இந்த இணை 66 ரன்கள் சேர்த்தது. நிசாங்கா, 44 ரன்களில் வெளியேறினார்.

தொடர்ந்து வந்த மில்லர் உடன் சேர்ந்து 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் ரிஸ்வி. 51 பந்துகளில் 90 ரன்கள் எடுத்த அவர், கார்பின் போஷ் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். தலா 7 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். 18.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து டெல்லி அணி வெற்றி பெற்றது. மில்லர் 21, ஸ்டப்ஸ் 3 ரன்கள் உடன் களத்தில் இருந்தனர்.

இந்த சீசனில் டெல்லி அணி விளையாடிய இரண்டு ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ரன் ரேட் அடிப்படையில் அந்த அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது. ஆட்ட நாயகன் விருதை ரிஸ்வி வென்றார்.

SCROLL FOR NEXT