விளையாட்டு

பகலில் காய்கறி விற்பனை, மாலையில் பயிற்சி: CWG பதக்கம் வென்ற ஜாண்டு குமாரின் வெற்றிக்கதை!

வேட்டையன்

கிளாஸ்கோ நகரில் நடைபெறும் 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்று கொடுத்துள்ளார் 28 வயதான ஜாண்டு குமார்.

இந்திய நேரப்படி சனிக்கிழமை (ஜூலை 25) அதிகாலை பாரா பவர் லிஃப்டிங்கில் இந்த சாதனையை அவர் படைத்தார். பதக்கம் வழங்கியபோது அவரது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. பிஹாரை சேர்ந்த அவர் காமன்வெல்த் பதக்கம் வென்ற வெற்றிக்கதையின் பயணத்தை பார்ப்போம்.

பிஹாரின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள ஹர்னவுத் பகுதியை சேர்ந்தவர்தான் ஜாண்டு குமார். சிறுவயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு கால்களின் செயல்பாட்டை இழந்தார். இருப்பினும் குடும்ப சூழல் காரணமாக சந்தையில் காய்கறி விற்பனை செய்துள்ளார்.

அதற்காக ஒவ்வொரு நாளும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து, மொத்த காய்கறி விற்பனை சந்தைக்கு சென்று, காய்கறிகளை வாங்கி வந்து விற்பனை செய்துள்ளார். மாலையில் உடற்பயிற்சி (வொர்க்-அவுட்) செய்வதுதான் தனக்கு சந்தோஷம் தரும் என அவர் தெரிவித்துள்ளார்.

‘எனது அசல் பெயர் அவினாஷ் குமார். எனக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டதும் குடும்பத்தினருக்கு நான் சுமையாக இருப்பேன் என்று பலரும் சொன்னார்கள். நாளடைவில் எனது பெயர் ஜாண்டு குமார்’ என்று மாறியது என கிளாஸ்கோவுக்கு புறப்படுவதற்கு முன்பு அவர் தெரிவித்தார். தொழிலுக்கு முதன்மை கொடுத்துள்ளார்.

‘நடிகர் சல்மான் கான் எனது இன்ஸபிரேஷன். தபாங் படத்தை பார்த்து நானும் அவரை போலவே கட்டுமஸ்தான உடலை பெறவேண்டும் என கருதினேன். அதற்காக உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றேன்’ என்கிறார். அப்போது பவர் லிஃப்டிங் குறித்து எதுவும் அறியாத அவர், தனது பயிற்சியில் தீவிரம் காட்டி உள்ளார். கடையை கவனிக்குமாறு குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பின்னர் பவர் லிஃப்டிங் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 2019-ல் நடைபெற்ற மாவட்ட அளவிலான பென்ச் பிரஸ் போட்டியில் தங்கம் வென்றார். அதே ஆண்டு ஜம்ஷெட்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் அவர் பதக்கம் வெல்லவில்லை. இருப்பினும் பயிற்சியாளர்களின் கவனத்தை அவர் ஈர்த்துள்ளார்.

அதன் பலனாக 2022-ல் தேசிய அளவிலான பாரா பவர் லிஃப்டிங்கில் வெண்கலம் வென்றார். அதன் பின்னரும் முறையான டயட் பின்பற்ற முடியாத நிலை. நாளொன்றுக்கு இரண்டு முட்டை சாப்பிடுவதை தனக்கான அதிர்ஷ்டமாக அவர் கருதி உள்ளார்.

இந்த சூழலில் காய்கறி விற்பனை செய்து வந்த இடத்தில் அரசின் கட்டுமான பணி காரணமாக காலி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் இ-ரிக்‌ஷா ஓட்டி உள்ளார். 2023 தேசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராகும் நோக்கில் தனது வாகனத்தை விற்பனை செய்துவிட்டு, அந்த பணத்தை அதற்கு பயன்படுத்தி உள்ளார். ஆனால், அதில் அவருக்கு தோல்வி கிடைத்துள்ளது.

தோல்வி கொடுத்த திருப்புமுனை

அந்த போட்டியில் அவரது செயல்திறனை கண்ட பயிற்சியாளர்கள் இந்திய விளையாட்டு ஆணையத்தில் பயிற்சி பெறும் வாய்ப்பை வழங்கி உள்ளனர். அங்கிருந்த பயிற்சியாளர்கள் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்பினார்.

2025-ல் தேசிய அளவில் 205 கிலோ எடையை தூக்கி சாதனை படைத்தார். கேலோ இந்தியா விளையாட்டில் 206 கிலோவாக அது உயர்ந்தது. அதே ஆண்டில் உலக பாரா பவர் லிஃப்டிங் உலகக் கோப்பை தொடரில் வெண்டக்காலம் வென்றார். இந்த சூழலில் தற்போது காமன்வெல்த் பதக்கமும் வென்று கவனம் ஈர்த்துள்ளார்.

இதில் 72.4 கீழ் எடைப்பிரிவில் பங்கேற்ற அவர், 130.9 புள்ளிகளை பெற்று வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT