டெகத்லான் விளையாட்டில் இந்தியாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக மாறியிருக்கிறார் தடகள வீரர் தேஜஸ்வின் சங்கர்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தடகள வீரர் தேஜஸ்வின் சங்கர், நேற்று ஆடவர் டெகத்லான் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று புதிய வரலாற்றைப் படைத்துள்ளார். காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றிலேயே டெகத்லான் பிரிவில் இந்தியாவின் சார்பில் பதக்கம் வெல்லும் முதல் தடகள வீரர் என்ற வரலாற்றுப் பெருமையை 27 வயதான தேஜஸ்வின் சங்கர் தட்டிச் சென்றுள்ளார்.
இதன்மூலம் டெகத்லான் விளையாட்டில் இந்தியாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாகவும், ஏராளமான தடகள வீரர்களின் முன்மாதிரியாகவும் மாறியிருக்கிறார். டெகத்லான் விளையாட்டு என்பது 10 விளையாட்டுகள் சேர்ந்த ஒரு கூட்டு விளையாட்டாகும். 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், 400 மீட்டர் ஓட்டம், 110 மீட்டர் தடை ஓட்டம், வட்டு எறிதல், போல் வால்ட் (கம்பு ஊன்றித் தாண்டுதல்), ஈட்டி எறிதல், 1,500 மீட்டர் ஓட்டம் என 10 விளையாட்டுகளைச் சேர்ந்தது. இதில் முதல் 5 விளையாட்டுகள் முதல் நாள் போட்டியிலும், கடைசி 5 விளையாட்டுகள் 2-ம் நாள் போட்டியிலும் நடைபெறும். இந்தப் போட்டியில்தான் தற்போது வெண்கலம் வென்று சாதித்துள்ளார் தேஜஸ்வின் சங்கர்.
கடந்த 2 நாட்களாக நடைபெற்ற போட்டியின்போது தேஜஸ்வின் ‘பேட்டெல்லார் டெண்டினிடிஸ்’ (patellar tendinitis) எனப்படும் நாள்பட்ட முழங்கால் தசைநார் அழற்சியால் அவதிப்பட்டு வந்தார். ஆனால், போட்டி என்று வரும்போது அதைப் பற்றி கவலைப்படாமல் களத்தில் இறங்கி டெகத்லானில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வாங்கிக் கொடுத்து பெருமை சேர்த்துள்ளார்.
பர்மிங்காமில் நடைபெற்ற 2022 காமன்வெல்த் போட்டியின்போது உயரம் தாண்டுதல் போட்டியில் தேஜஸ்வின் சங்கர் வெண்கலம் வென்றிருந்தார். தற்போது காமன்வெல்த்தில் 2-வது பதக்கத்தை வென்றெடுத்துள்ளார்.
பதக்க தாகம் தொடரும்
போட்டியில் வெற்றி பெற்றது குறித்து தேஜஸ்வின் சங்கர் கூறியதாவது: காமன்வெல்த்தில் 2-வது பதக்கம் வென்றது மகிழ்ச்சி. முதன்முறையாக டெகத்லானில் இந்தியாவுக்காக பதக்கம் வெல்வது கூடுதல் மகிழ்ச்சிதான். என்னால் எனது ஆனந்தக் கண்ணீரை அடக்க முடியவில்லை. போட்டியின்போது காயத்தால் நான் அவதிப்பட்டேன். ஆனால் பதக்க மேடையை அலங்கரிக்க வேண்டும் என்ற தாகத்தால் வலியைப் பொறுத்துக் கொண்டு விளையாடினேன்.
வலியால் எனக்கு ஏற்பட்ட வேதனை இன்று போய்விட்டது. இனி நான் அழமாட்டேன். முழங்கால் காயத்தால் நான் அழுதது உண்மைதான். இதனால் எதிர்மறையான சூழல், எண்ணங்கள் மனதில் ஏற்பட்டன. ஆனாலும், மனதில் வைராக்கியம் இருந்தது. பதக்கத்தை தவற விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டேன். இன்று கழுத்தில் பதக்கத்துடன் நிற்கிறேன். இதைச் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. இது நம்பவே முடியாத ஒன்றாக இருக்கிறது.
எனக்கு இன்னும் பதக்க தாகம் தணியவே இல்லை. தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று இந்தியாவுக்காக பதக்கம் வெல்வேன். எனது மனம் இன்னும் அதிகமாகவே விரும்புகிறது. எனக்கு இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்ற ஆசை.
நான் காயத்தால் அவதிப்பட்டபோது நீளம் தாண்டுதல் வீரர் முரளி ஸ்ரீசங்கர் என்னிடம் வந்து எனக்கு ஆறுதல் கூறினார். அவரது அறிவுரையை ஏற்று செயல்பட்டேன். விளையாட்டு வாழ்க்கையையே அச்சுறுத்தும் காயங்களை எதிர்கொள்வது எப்படி இருக்கும் என்பதை முரளி நன்கு அறிந்திருந்தார். தனது சக வீரர் எத்தகைய சூழலில் இருக்கிறார் என்பதையும் அவர் சரியாகப் புரிந்துகொண்டு என்னிடம் பேசினார்.
உயரம் தாண்டும் போட்டிக்குப் பிறகு நான் முற்றிலும் மனமுடைந்து போயிருந்தபோது, என்னை அணுகிய ஒரே நபர் அவர்தான். டெகத்லானில் 10 போட்டிகள். ஒவ்வொரு போட்டியாக எதிர்கொண்டு சாதிக்கவேண்டும். மைதானத்துக்கு வா என்று என்னை ஊக்கப்படுத்தினார். அவருடைய வார்த்தைகள் உண்மையாகவே எனக்கு ஊக்கத்தையும், தூண்டுதலையும் அளித்தன.
எனது மனம் சொல்வதை நான் கேட்டேன். மன உறுதியுடன் மீண்டு வந்து சாதித்ததற்கு முரளி ஸ்ரீசங்கரின் வார்த்தைகள்தான். இந்தப் பயணம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. இவ்வாறு கண்களில் உற்சாகம் பொங்கப் பேசி அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளார் தேஜஸ்வின் சங்கர்.
வாழ்த்துக்கள் தேஜஸ்வின் சங்கர்..!