மும்பை: ஐபிஎல் 2026 தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.
வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாகத் தொடங்கி 22 ரன்களில் வெளியேறினார். பின்னர் களம் புகுந்த சஞ்சு சாம்சன், மும்பை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.
54 பந்துகளில் 101 ரன்கள் (10 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) விளாசிய அவர், இந்த சீசனில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார். டெவால்ட் பிரெவிஸ் மற்றும் ஷிவம் துபே ஆகியோர் ஒத்துழைப்பு அளிக்க, சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 1 விக்கெட் வீழ்த்தினார்.
208 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. பவர்பிளே முடிவில் அந்த அணி 29 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. திலக் வர்மா (37) மற்றும் சூர்யகுமார் யாதவ் (20) ஜோடி சிறிது நேரம் போராடிய போதும், சென்னையின் சுழற்பந்து வீச்சாளர் அகீல் ஹொசைன் தனது அசத்தல் பந்துவீச்சால் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி மும்பையின் வெற்றி கனவைத் தகர்த்தார்.
நூர் அகமது மற்றும் ஜேமி ஓவர்டன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இறுதியில் மும்பை அணி 19 ஓவர்களில் 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியைச் சந்தித்தது.
இந்த அபார வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ரன் ரேட்டைப் பெருமளவு உயர்த்தியுள்ளதுடன், புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆட்டநாயகனாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார்.