விளையாட்டு

வெற்​றியை தொடரும் முனைப்பில் சிஎஸ்கே: சேப்பாக்கத்​தில் இன்று குஜராத் டைட்டன்ஸுடன் மோதல்

வா.சங்கர்

சென்னை: ஐபிஎல் கிரிக்​கெட் தொடரில் இன்று சென்னை சேப்பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெறவுள்ள ஆட்​டத்​தில் சென்னை சூப்​பர் கிங்ஸ் (சிஎஸ்​கே), குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​கள் மோதவுள்​ளன.

இந்த ஆட்​டம் இன்று பிற்​பகல் 3.30 மணிக்கு நடை​பெறவுள்​ளது. சிஎஸ்கே அணி தனது கடைசி லீக் ஆட்​டத்​தில் மும்பை இந்​தி​யன்ஸ் அணியை அதன் சொந்த மண்​ணில் 103 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​திய உற்​சாகத்​துடன் களமிறங்​கு​கிறது. சிஎஸ்கே அணி இது​வரை 7 போட்​டிகளில் விளை​யாடி 3 வெற்​றி, 4 தோல்வி​களு​டன் 6 புள்​ளி​களைப் பெற்​றுள்​ளது. எனவே, சிஎஸ்கே அணிக்கு எஞ்​சிய அனைத்​துப் போட்​டிகளும் மிக முக்​கிய​மான​தாகக் கருதப்​படு​கிறது.

மும்​பை​யுட​னான போட்​டி​யில் தொடக்க வீரர் சஞ்சு சாம்​சன் அதிரடி​யாக விளை​யாடி இந்​தத் தொடரில் 2-வது சதத்​தைப் பதிவு செய்​தார். மற்ற வீரர்​கள் சோபிக்​காத நிலை​யிலும் ஒரு முனை​யில் நங்​கூரம் போல் நின்று சதத்தை விளாசி ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார் சஞ்சு சாம்​சன். எனவே, இன்​றைய ஆட்​டத்​தி​லும் அவரிட​மிருந்து மிகச்​சிறந்த இன்​னிங்ஸ் வெளிப்​படக்​கூடும் என எதிர்​பார்க்​கலாம்.

அதே​நேரத்​தில் மற்​றொரு தொடக்க ஆட்​டக்​காரரும், கேப்​ட​னு​மான ருது​ராஜ் கெய்க்​வாட்​டிட​மிருந்து எதிர்​பார்த்த அதிரடி ஆட்​டம் இது​வரை வெளிப்​பட​வில்​லை. 7 ஆட்​டங்​களில் விளை​யாடி​யுள்ள அவர் இது​வரை 104 ரன்​கள் மட்​டுமே எடுத்​துள்​ளார்.

எனவே, இன்​றைய ஆட்​டத்​தில் அதிரடி இன்​னிங்ஸை வெளிப்​படுத்த வேண்​டிய கட்​டா​யம் ருது​ராஜுக்கு வந்​துள்​ளது. அதே​போல் சர்ப்​ராஸ் கான், ஷிவம் துபே, டெவால்ட் பிரே​விஸ், கார்த்​திக் சர்​மா, ஜேமி ஓவர்​டன் ஆகியோரிட​மிருந்து குறிப்​பிடத்​தக்க ரன்​கள் வரும்​போது அது சிஎஸ்கே அணி​யின் வெற்​றிக்கு உதவக்​கூடும்.

பந்​து​வீச்​சில் கடந்த ஆட்​டத்​தில் மிகச்​சிறப்​பான முறை​யில் பந்​து​வீசி சிஎஸ்கே அணியை வெற்றி பெற வைத்​தார் அகீல் ஹொசைன். அவர் 4 ஓவர்​கள் பந்​து​வீசி 17 ரன்​கள் மட்​டுமே விட்​டுக்​கொடுத்து 4 முக்​கிய விக்​கெட்​களைக் கைப்​பற்​றி​னார். எனவே, அவர் இந்த ஆட்​டத்​தி​லும் சிறப்​பாக பந்​து​வீசி எதிரணிக்கு அதிக அழுத்​தத்​தைத் தரக்​கூடும்.

அதே​போல் முகேஷ் சவுத்​ரி, அன்​ஷுல் கம்​போஜ், நூர் அகமது, ஜேமி ஓவர்​டன், குர்​ஜப்​நீத் சிங் ஆகியோ​ரும் எதிரணி​யின் பேட்​ஸ்​மேன்​களுக்கு அச்​சுறுத்​தலைத் தரக்​கூடும்.

அதே​நேரத்​தில் குஜ​ராத் அணி 7 போட்​டிகளில் விளை​யாடி 3 வெற்​றி, 4 தோல்வி​களு​டன் 6 புள்​ளி​களைப் பெற்று களமிறங்​கு​கிறது. கடைசி​யாக நடை​பெற்ற 2 ஆட்​டங்​களி​லும் முறையே மும்​பை, பெங்​களூரு அணி​களு​டன் தோல்வி கண்ட நிலை​யில் அந்த அணி சென்னை வந்​துள்​ளது.

அணி​யின் பேட்​டிங், பந்​து​வீச்சு வலு​வாக இருந்​த​போதும், வெற்றிக்கான வழிகளை அந்த அணி​யால் கண்​டறிய முடியவில்லை. பெங்​களூரு அணி​யுட​னான ஆட்​டத்​தில் அந்த அணி 205 ரன்​களைக் குவித்​தது. ஆனாலும் பெங்​களூரு அணி​யின் விராட் கோலி, தேவ்​தத் படிக்​கல் ஆகியோரின் அதிரடி ஆட்​டத்​தால் குஜ​ராத் அணி 5 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் தோல்வி கண்​டது. எனவே, இன்​றைய ஆட்​டத்​தில் அந்த அணி வெற்​றியைப் பெறு​வதற்​கான வழிகளில் இறங்​கக்​கூடும்.

குஜ​ராத் அணி​யின் தொடக்க வீரர்​கள் சாய் சுதர்​ஷன், கேப்​டன் ஷுப்​மன் கில் ஆகியோர் அதிரடி​யாக விளை​யாடி வரு​கின்​றனர். பெங்​களூரு அணி​யுட​னான ஆட்​டத்​தில் சதம் விளாசிய சாய் சுதர்​ஷனிட​மிருந்து மேலும் ஒரு சிறப்​பான இன்​னிங்ஸ் இன்​றைய ஆட்​டத்​தில் வெளிப்​படக்​கூடும்.

அதே​போல் கேப்​டன் ஷுப்​மன் கில்​லும், அதிரடி ஆட்​டத்தை வெளிப்​படுத்தி எதிரணி​யின் பந்​து​வீச்​சாளர்​களுக்கு நெருக்​கடியை அளிப்​பார் என்று எதிர்​பார்க்​கலாம். மேலும் பேட்​டிங்​கில் ஜாஸ் பட்​லர், வாஷிங்​டன் சுந்​தர், ஜேசன் ஹோல்​டர், ஷாருக் கான், ராகுல் டெவாட்​டியா ஆகியோ​ரும் உறு​துணை​யாக இருக்​கும்​பட்​சத்​தில் அது சிஎஸ்கே அணிக்கு நெருக்​கடியை அளிக்​கும்.

அதே​போல், பந்​து​வீச்​சில் முகமது சிராஜ், காகிசோ ரபா​டா, ஜேசன் ஹோல்​டர், ரஷித் கான், பிரசித் கிருஷ்ணா என வலு​வான வரிசையுடன் குஜ​ராத் அணி களமிறங்குகிறது.

SCROLL FOR NEXT