சென்னை: ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசன் போட்டி வரும் 28-ம் தேதி பெங்களூருவில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்தத் தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி தனது முதல் ஆட்டத்தில் 30-ம் தேதி ராஜஸ்தானுடன் மோதுகிறது.
இந்த ஆட்டம் குவாஹாட்டியில் நடைபெறுகிறது. தொடர்ந்து ஏப்ரல் 3-ம் தேதி தனது சொந்த மைதானமான சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சிஎஸ்கே அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் சிஎஸ்கே சார்பில் முதன்முறையாக மெகா ரசிகர்கள் திருவிழா நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் 22-ம் தேதி மாலை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில், சிஎஸ்கே அணிக்காக வெவ்வேறு காலக்கட்டங்களில் விளையாடிய ‘ஆல்டைம் கிரேட்’ சூப்பர் கிங்ஸ் நட்சத்திரங்களான சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹைடன், முரளி விஜய், பத்ரிநாத் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இவர்கள் தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து, அதிரடியான மற்றும் இதுவரை கண்டிராத சில சுவாரஸ்யமான விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளனர். புகழ்பெற்ற ஆஸ்கார் விருது வென்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை இன்று (15-ம் தேதி) சிஎஸ்கே மற்றும் டிஸ்ட்ரிக்ட் இணையதளத்தில் தொடங்குகிறது.