புதுடெல்லி: இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார் என்று தோன்றுகிறது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார்.
ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டி குறித்து ஜியோஹாட் ஸ்டார் சேனலுக்கு அளித்த பேட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியதாவது: சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே பேட்டிங் செய்ய வரும்போதே, முழங்காலில் கட்டு போட்டபடி வந்தார். அது தசைப்பிடிப்பாக இருக்க வாய்ப்பில்லை.
ஆடுகளத்தில் ஆயுஷ் மாத்ரே நொண்டியபடியே விளையாடினார். உடலியக்க நிபுணர்கள் களத்துக்கு வந்து பரிசோதனை செய்து பார்த்தனர். அதன் பின்னரும், அவரை விளையாட வைத்து, ரன் ஓடவைத்தனர். இது பெரிய காயமாக மாறினால், அவராலும் அடுத்த 6 வாரங்களுக்கு விளையாட முடியாது.
சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் மிகுந்த நெருக்கடியில் இருப்பது போல தோன்றுகிறது. இந்தப் போட்டியின்போது அவர் சிறப்பாக விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவசர கதியில் புல் ஷாட் விளையாடி அவுட்டாகிவிட்டார். ஒருவேளை, களத்தில் ருதுராஜ் நீண்ட நேரம் நின்று விளையாடி இருந்தால், அது ஆட்டத்தின் போக்கை மாற்றியிருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்