விளையாட்டு

போர்ச்சுக்கல் தேசிய அணியில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ ஓய்வு

மோகன் கணபதி

போர்ச்சுக்கல் தேசிய அணியில் இருந்து தான் ஓய்வு பெறப்போவதாக கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “போர்ச்சுக்கல் தேசிய அணியில் இருந்து நான் ஓய்வு பெற இருக்கிறேன். போர்ச்சுக்கல் தேசிய அணியின் 7-ம் எண் கொண்ட ஜெர்சியை நான் ஒப்படைக்க வேண்டிய நாள் வந்துவிட்டது. நவம்பர் மாத சர்வதேச போட்டிகளுக்குப் பிறகு நான் அணிந்து வந்த 7-ம் எண் கொண்ட ஜெர்சியை ஒப்படைக்கப் போகிறேன்.

இந்த ஜெர்சி எனக்கு மட்டுமே சொந்தமானது என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால், கடந்த 23 ஆண்டுகளாக இதை அணிவதற்கும், இதை காப்பதற்கும், உலகம் முழுவதும் உள்ள மைதானங்களுக்கு இதை எடுத்துச் செல்வதற்கும் எனக்கு கிடைத்த வாய்ப்பையும் பொறுப்பையும் நான் பெருமையாகக் கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

41 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, போர்ச்சுகல் அணிக்காக 234 போட்டிகளில் விளையாடி, 146 கோல்களை அடித்துள்ளார். 2016-ம் ஆண்டு நடைபெற்ற யூரோ கோப்பையின்போது அவர் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தினார். போர்ச்சுகல் அணி யூரோ கோப்பையை வெல்லவும் உதவினார்.

சர்வதேச போட்டிகளில் அதிகமுறை விளையாடிய வீரராகவும், அதிக கோல்களை அடித்த வீரராகவும் அவர் உலக சாதனை படைத்துள்ளார்.

2004 யூரோ தொடருக்கு முன்பாக தொடங்கியது அவரது விளையாட்டு வாழ்க்கை. பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸ் உடனான கருத்து வேறுபாடு காரணமாக தற்போது அவர் அணியில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோவின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT