

புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் (எஸ்எஸ்ஆர்) மேற்கொள்வதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநிலங்கள், சண்டிகர், தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டாமன் டயு ஆகிய யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல்களில் சிறப்பு சுருக்கத் திருத்தம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியானது, தகுதியுள்ள வாக்காளர்களை குறிப்பாக இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களைப் பதிவு செய்வதையும், ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 2027 ஆகிய தேதிகளில் தகுதி பெறும் வாக்காளர்களிடம் இருந்து முன்கூட்டியே விண்ணப்பங்களை பெறுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல்கள் நவம்பர் 30ம் தேதி வெளியிடப்படும். வாக்காளர் பட்டியல்களின் இறுதி வெளியீடு ஜனவரி 21, 2027 அன்று நடைபெறும்.
இந்தப் பணிக்குத் தேவையான மனிதவளம் மற்றும் பிற வளங்களை உறுதி செய்யுமாறு அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுளளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.