மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி நினைவாற்றல் பாதிப்பால் அவதிப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை அவரது நெருங்கிய நண்பர் மார்கஸ் உறுதி செய்துள்ளார்.
54 வயதான வினோத் காம்ப்ளி, இந்திய அணிக்காக மொத்தம் 104 ஒருநாள் போட்டிகள் மற்றும் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் அவருக்கு பென்ஷன் தொகை வழங்கப்பட்டு வருவதாக தகவல். இந்த சூழலில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. கடந்த 2024-ல் அவர் நடக்கவே மிகவும் சிரமப்பட்ட வீடியோ காட்சி வெளியானது.
இந்த சூழலில் தற்போது அவர் நினைவாற்றல் பாதிப்பால் அவதிப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் உட்பட அவரது நெருங்கிய நண்பர்கள் குழு நிதியுதவி அளித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு மார்கஸ் கூறியதாவது:
வினோத் காம்ப்ளியின் நினைவாற்றல் சிறந்ததாக இல்லை. கடந்த ஆறு மாத காலமாக அதில் பின்னடைவு இல்லை என்பது இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். சட்டென ஒருவரை அவரால் நினைவு கொள்ள முடியவில்லை. அது அவருக்கு மிகவும் கடினமாக உள்ளது. அவருக்கு பக்கவாதம் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அவர் இப்போது மது குடிப்பதில்லை. சமயங்களில் சிகரெட் புகைக்கிறார். அதுதான் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்போது அவருக்கு இப்போது பாதிப்பு இதயத்திலோ, சிறுநீரகத்திலோ அல்ல மூளையில். இதை அறியாதவர்கள் அவருக்கு சிகரெட் கொடுக்கின்றனர்.
இருப்பினும் அவரால் இயல்பாக நடக்க முடிகிறது. குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுகிறார். தானேவில் உள்ள சிகிச்சை மையத்துக்கு சென்று வருகிறார். அங்கு அவருக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதெல்லாம் எங்கள் நண்பர்கள் அளிக்கும் நிதியால் சாத்தியமாகி உள்ளது. அவர்கள் அதிகம் வழங்கி வருகிறார்கள். இதற்காக வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கி உள்ளேன். இந்த குழுவில் உள்ள நண்பர்களின் பெயரை பகிர விரும்பவில்லை. நாங்கள் எல்லோரும் நண்பர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.