

நாமக்கல்: “தொகுதி மறுசீரமைப்பு அநீதிக்கு எதிராக நாம் நடத்திக் கொண்டிருப்பது போராட்டம் இல்லை, போர். போர்கள் ஒன்றும் தமிழ்நாட்டுக்கு புதியது இல்லை” என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் நாமக்கல், ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம், பரமத்தி வேலூர், குமாபராளையம் ஆகிய 5 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் ராணி, மதிவேந்தன், பூமலர், மூர்த்தி, பாலு ஆகியோர் போட்டியிடுகின்றனர். திருச்செங்கோட்டில் திமுக கூட்டணியில் கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் போட்டியிடுகிறார். இவர்களை ஆதரித்து நாமக்கல் பொம்மைக்குட்டைமேட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியது:
“தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு... கருப்புக் கொடியேற்றி இன்றைக்கு காட்டிவிட்டோமா, இது வெறும் ட்ரெய்லர்தான். மெயின் பிக்சரை பார்க்க வேண்டும் என்று டெல்லி ஆசைப்படக் கூடாது.
தமிழர்களின் ரத்தத்தில் சூடு குறைந்துவிட்டது, தெருவில் இறங்கிப் போராட மாட்டார்கள் என்று நினைக்காதீர்கள்... மொழிக்காக வீதிகளில் இறங்கியவர்கள்... எங்கள் இனத்தின் உரிமைக்காக இறங்கமாட்டோமா? தமிழர்களுக்காகப் போராட யார் இருக்கிறார்கள் என்று நினைத்தார்கள். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறான். ஆயிரம் எமர்ஜென்சியைப் பார்க்க நான் தயார்.
பிரதமர் மோடி அவர்களே... டெல்லியின் ரிமோட் கன்ட்ரோலுக்கு அடிமைகள்தான் அடிபணிவார்கள்; தன்மானமுள்ள தமிழர்கள் அடிபணிய மாட்டோம். தென்மாநில மக்களுடைய குரலை மதிக்கமாட்டேன் என்று இருக்கும் ஒன்றிய பாஜக-வின் கொட்டத்தை அடக்குவோம்.
மாநிலங்களால் உருவாகியிருக்கும் இந்தியாவில், மாநிலங்களை நசுக்க வேண்டும் என்று நினைத்தால் கை கட்டி, வாய் பொத்தி, அடிமையாக அடங்கியிருப்போம் என்று தப்புக் கணக்கு போட்டிருக்கிறீர்கள். தமிழ்நாட்டின் போராட்டக் குணத்தைப் பார்க்க ஆசைப்பட வேண்டாம் என்று டெல்லியை நான் எச்சரிக்க விரும்புகிறேன்.
தொகுதி மறுசீரமைப்பு என்பது, தமிழ்நாட்டிற்கு எதிராகப் பாஜக-வும், அதற்கு ஜால்ரா போடும் அதிமுக-வும் ஏற்படுத்தியிருக்கும் பேராபத்து. தமிழ்நாட்டின் குரலை ஒடுக்க பாஜக போடும் சதி திட்டம்தான் தொகுதி மறுசீரமைப்பு. அதனை வெளிப்படையாக எதிர்ப்பதற்குக்கூட முதுகெலும்பற்ற கூட்டம்தான் அதிமுக.
தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கும் நேரத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம்.பி.க்கள் அனைவரும் பிரச்சாரத்தில் இருப்பார்கள்; இந்த இடைவெளியில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, இந்தச் சட்டத்தை நிறைவேற்றலாம் என்று பாஜக நினைத்தது.
முதலில், மக்களுடைய உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் ஜனநாயகத்தில் தேர்தலுக்கு ஓர் அர்த்தம் இருக்கும். நாம் போடும் வாக்குக்கே வேல்யூ இல்லை என்று ஒரு நிலை வரும் என்றால், அதை எதிர்க்க வேண்டாமா? அதனால்தான், நம்முடைய எம்.பி.க்கள் அனைவரும் டெல்லியில் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.
நமக்கு கொள்கைதான் முக்கியம். தமிழ்நாட்டு உரிமைகள்தான் முக்கியம். நம்மையெல்லாம் ஆளாக்கிய அண்ணா சொன்னதுதான்... ‘எங்களுக்கு பதவி என்பது தோளில் போடும் துண்டு, கொள்கை என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி.’
தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் பத்து தோல்வி பழனிசாமிக்கு பதினோராவது தோல்வியை நீங்கள் கொடுக்க வேண்டும். தவறுக்கு மேல் தவறுகள் செய்த பழனிசாமி, தன்னுடைய தவறுகளில் இருந்து தப்பிக்கச் சரண்டரான இடம்தான் பாஜக வாஷிங் மெஷின். தன்னுடைய தவறுகளில் இருந்து தப்பிக்க அவர் கொடுத்த விலைதான், தமிழ்நாட்டின் உரிமைகள். அ.தி.மு.க.வுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் பாஜக-வுக்கு விழும் வாக்குகள்; தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு விழும் தடைக்கற்கள்.
எனவே, தமிழ்நாட்டை வட்டமிடும் பாஜக எனும் பருந்தை விரட்டியடிக்க வேண்டும். டபுள் எஞ்சின், டப்பா எஞ்சின் என்று சொல்லிக் கொண்டு டெல்லியினுடைய ரிமோட் கன்ட்ரோலுக்கு ஆடும் அடிமைகள் தமிழ்நாட்டை ஆளக் கூடாது. தமிழ்நாட்டை நாசப்படுத்த நினைக்கும் ஆணவப் பாஜக-வும், அடிமை அ.தி.மு.க.வும் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட வேண்டும். அதற்கு திராவிட முன்னேற்றக் கழகம்தான் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும்.
நாட்டு மக்களுக்கு நல்லதைச் செய்ய வேண்டும் என்று தொலைநோக்குப் பார்வையோடு நாம் செயல்பட்டுக் கொண்டிருந்தால், எப்படியெல்லாம் பின்னோக்கி இழுக்கலாம் என்று பாஜக சதித் திட்டம் போடுகிறது. தெற்கு மறுபடியும் தேய வேண்டும் என்று பாஜக உருவாக்கியிருக்கும் லேட்டஸ்ட் பிளான்தான் இந்த தொகுதி மறுசீரமைப்பு.
தொகுதி மறுசீரமைப்பு அநீதிக்கு எதிராக நாம் நடத்திக் கொண்டிருப்பது போராட்டம் இல்லை, போர். போர்கள் ஒன்றும் தமிழ்நாட்டுக்கு புதியது இல்லை. முதலில் சமூகநீதிப் போர். இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தபோது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே முதலில் திருத்த வைத்தது தமிழ்நாடுதான்.
அடுத்து, மொழிப்போர். தாய் கொடுத்த உயிரைத் தாய் மொழிக்குத் தந்து கட்டாய இந்தியை விரட்டிய வீரம் செறிந்த வரலாற்றுக்குச் சொந்த மண், நம்முடைய தமிழ்நாடு. இந்தப் போரில்தான் நேருவின் உறுதிமொழியும் வந்தது, அண்ணாவும் இருமொழிக் கொள்கையை உருவாக்கினார். இப்போது நடப்பது தமிழ்நாட்டின் அரசியல் உரிமைக்கான போர்.
ஏன் இந்தப் போர் என்றால், இந்திய விடுதலைக்குப் பிறகு இந்திய நாட்டில் பசியும் வறுமையும் அதிகமாகி இருக்கிறது, இதைச் சரி செய்ய வேண்டும் என்றால் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சொன்னார்கள். அதில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து நாட்டின் முன்னேற்றத்தையும், தேச நலனையும் மனதில் வைத்துக் கொண்டு, நம்முடைய தமிழ்நாடும் இன்னும் பல மாநிலங்களும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை முறையாக செயல்படுத்தினோம். இப்போது என்னவென்றால், உங்கள் மாநில மக்கள்தொகைக்கு ஏற்றாற்போல் தொகுதி மறுசீரமைப்பு செய்யப் போகிறோம் என்று சொல்கிறார்கள்.
உண்மை என்னவென்றால், இதே காலகட்டத்தில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தாமல் இருக்கும் சில மாநிலங்களுக்குத்தான் விகிதாச்சாரப்படி அதிக இடம் கிடைக்கிறது. புரியும்படிச் சொல்ல வேண்டும் என்றால், 1971 சென்சஸ்படி, தமிழ்நாட்டின் மக்கள் தொகை 4 கோடி. உத்தரப் பிரதேசத்தின் மக்கள் தொகை எட்டு கோடி. இன்றைக்கு, தமிழ்நாட்டின் மக்கள் தொகை எட்டு கோடி. ஆனால், உத்தரப் பிரதேசத்தின் மக்கள் தொகை 20 கோடிக்கும் மேல் இருக்கும் என்று சொல்கிறார்கள்.
நமக்கும் அவர்களுக்கும் மூன்று மடங்கு வித்தியாசம். இப்படி இருக்கும்போது, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரித்தால் அது நியாயமாக இருக்குமா?
இதனை உணர்ந்துதான், இந்திரா காந்தியும், வாஜ்பாயும் தொகுதி மறுசீரமைப்பு முடிவைத் தள்ளிப் போட்டார்கள். இப்போது இந்தத் திட்டத்தை இவ்வளவு அவசர அவசரமாக மோடி செய்ய வேண்டிய ரகசியம் என்ன? இப்படியொரு அநீதி நடந்தால் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரல் வலுவிழந்துவிடும்.
நம்முடைய எம்.பி.க்களுக்கு பவர் இல்லை என்றால் டெல்லி அதிகார வர்க்கம் தமிழ்நாட்டைப் பற்றிச் சிந்திக்குமா? நமக்கு எந்தத் திட்டமாவது கிடைக்குமா? தென்னிந்தியாவில் இருந்து பிரதமர் உருவாக வேண்டும் என்பது நடக்கவே நடக்காது. இனி அதை நாம் எதிர்பார்க்கவே முடியாது. சொந்த நாட்டுக்குள்ளேயே தமிழ்நாடு மக்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றப்படுவதை அனுமதிக்கலாமா? இந்த ஆபத்துதான் தொகுதி மறுசீரமைப்பு.
நாம் என்ன கேட்கிறோம், கூட்டாட்சித் தத்துவத்தையே ஒழிக்க நினைக்காதீர்கள். வரிப்பணத்திற்கு மட்டும்தான் தமிழ்நாடு உங்களுக்குத் தேவையா? பாஜக-வின் அதிகார திமிரை அடக்கும் காலம் வந்துவிட்டது. தலைவர் கருணாநிதி ‘பராசக்தி’யில் வசனம் எழுதியிருப்பார், இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது என்று எழுதியிருப்பார்.
அதேபோன்று, நம்முடைய நாடும் எத்தனையோ பிரதமர்களைச் சந்தித்திருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி மாதிரி மாநிலங்களை நசுக்கியவர்கள் யாரும் கிடையாது. இத்தனைக்கும் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, மாநில உரிமைகள் பற்றி வக்கணையாகப் வாய்கிழியப் பேசிக் கொண்டிருந்தார்.
என்னென்ன பேசினார்? ஒன்றிய அரசு வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு 50 விழுக்காட்டைத் தர வேண்டும் என்று சொன்னார். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்று சொன்னார். ஒன்றிய அரசுகளுடைய அதிகாரக் குவிப்பைக் கடுமையாக எதிர்த்தார். இதெல்லாம் குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி சொன்னது.
ஆனால் இப்போது, மாநில அதிகாரங்களைப் பறித்து ஒன்றியத்தில் குவிக்கிறார். மாநிலங்கள் உரிமையைக் கேட்பது வேப்பங்காயாக இப்போது கசக்கிறது. மொத்தத்தில் கூட்டாட்சிக் கருத்தியலையே குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறார்.
முதல் முறையாகப் மோடி பிரதமரானபோது நாடாளுமன்றத்துக்கு முன்னால் பவ்யமாக விழுந்து கும்பிடு போட்டார் நம்முடைய பிரதமர், இப்போது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கே ஒரே அடியாகக் கும்பிடு போட வேண்டும் என்று நினைக்கிறார். அதுதான் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் தொகுதி மறுசீரமைப்பு.
மகளிர் இடஒதுக்கீடு என்று அவர்கள் சொல்வது பம்மாத்து வேலை. உண்மையிலேயே அதுதான் நோக்கம் என்றால், 2023-இல் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியபோது, 2029-க்குப் பிறகு என்று சொன்னார்கள்? ஏனென்றால் மகளிர் முன்னேற்றம் இவர்களின் நோக்கம் இல்லை; இவர்களின் நோக்கம் ஆர்எஸ்எஸ் விரும்பும் ஒரே நாடு, ஒரே அரசு. அதற்காகத்தான் அரசியல் சட்டத்தைக் காலால் மிதித்து இவ்வளவு அட்டூழியங்களையும் செய்கிறார்கள். இதை எப்படித் தமிழ்நாடு ஒத்துக் கொள்ள முடியும்?
தமிழ்நாட்டில் இருக்கும் கடைக்கோடி மனிதர்களும் இன்றைக்கு எதிர்த்துப் பேசிக் கொண்டு இருக்கிறோம். ஆனால், இந்த அநீதிக்கும் ஆதரவாகப் பேசும் ஒரு மனிதர் இருக்கிறார் என்றால், அவர்தான், அரசியல் அவமானமாகப் பார்க்கப்படும் அடிமைசாமி. புரிகிறதா, அடிமைசாமி என்று யாரை சொல்கிறேன் என்று.
இன்றைக்கு நாட்டில் இவ்வளவு பிரச்சினை நடந்து கொண்டு இருக்கிறது. பழனிசாமி என்ன பேசியிருக்கிறார் என்றால், டீ-லிமிட்டேஷனால் தமிழ்நாட்டிற்கு ஆபத்து வராது என்று அமித் ஷா சொல்லியிருக்கிறார் என்று பேசியிருக்கிறார். தமிழ்நாட்டிற்குப் பாதிப்பு இருக்காது என அமித் ஷாவே சொல்லிட்டார் என்று பழனிசாமி பேசுகிறார். ஒன்றிய அரசு சிறப்பாகச் செய்வார்கள் என்று பேசியிருக்கிறார்.
அமித் ஷா எங்கே சொன்னார்? தேர்தல் பிரசாரத்தில்! நாங்கள் என்ன கேட்டோம்? நாடாளுமன்றத்தில் வைத்துப் பிரதமர் வாக்குறுதி தர வேண்டும் என்று கேட்கிறோம். எங்களுக்குப் பேப்பரில், சட்டபூர்வமாக நாடாளுமன்றத்தில், உறுதிமொழி வேண்டும். 1971 மக்கள் தொகை அடிப்படையில்தான் அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொகுதி அளவு இருக்கும் என்கிற உறுதிமொழி வேண்டும்.
தேர்தல் கூட்டத்தில் அமித் ஷா சொன்னதையெல்லாம் தண்ணீரில்தான் எழுதி வைக்க வேண்டும். கூட்டணியில் இருக்கும் பாவத்திற்கு அடிமை பழனிசாமி வேண்டுமானால், அதையெல்லாம் நம்பலாம்! திமுக-வோ, திமுக ஆளும் தமிழ்நாடோ, வேல்யூ இல்லாத உங்களுடைய வெற்று வார்த்தைகளை நம்பாது.
பழனிசாமி இப்போது தொகுதி மறுசீரமைப்பு பற்றிப் பேசுகிறார்… “ஆபத்து வரும் பின்னே… பழனிசாமியின் லா பாயின்ட் வரும் முன்னே” என்று, இதனை நாம் எச்சரிக்கையாகத்தான் பார்க்க வேண்டும்.
தனி மனிதர்களைவிட நமக்கு தமிழ்நாடுதான் பெரிது. எனவே, தமிழ்நாட்டை வட்டமிடும் பாஜக எனும் பருந்தை விரட்டியடிக்க வேண்டும். டபுள் எஞ்சின், டப்பா எஞ்சின் என்று சொல்லிக் கொண்டு டெல்லியினுடைய ரிமோட் கன்ட்ரோலுக்கு அடிமைகள் தமிழ்நாட்டில் ஆடக் கூடாது” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.