சென்னை: சென்னையை அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே பொறியியல் கல்லூரியில் மண்டல அளவிலான பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான மஞ்சுளா முனிரத்தினம் நினைவு கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது.
ஆர்எம்கே குழும நிறுவனங்களின் இயக்குநர் ஜோதி நாயுடு, கல்லூரியின் முதல்வர் முகமது ஜுனைத் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். முதல் ஆட்டத்தில் ஆர்எம்கே பொறியியல் கல்லூரி, சவீதா பொறியியல் கல்லூரியுடன் மோதியது. முதலில் பேட் செய்த ஆர்எம்கே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது.
சஞ்சய் 31, யோகேஷ்வரன் 27 ரன்கள் சேர்த்தனர். சவீதா அணி தரப்பில் விக்னேஷ் 4, ராகுல் 2 விக்கெட்களை வீழ்த்தினர். 117 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சவீதா அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ராகுல் 37, அபிஷேக் 16 ரன்கள் சேர்த்தனர்.
மற்ற ஆட்டங்களில் ஆர்எம்டி பொறியியல் கல்லூரி அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் எஸ்விசி பொறியியல் கல்லூரி அணியும், கிண்டி சிப்பெட் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வேலம்மாள் பொறியியல் கல்லூரி அணியும் தோற்கடித்தன.
அம்ரிதா பல்கலைக்கழக அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் பனிமலர் பொறியியல் கல்லூரி அணியிடம் தோல்வி அடைந்தது.பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியை ஆர்எம்கே குழும நிறுவனங்களின் இயக்குநர் ஜோதி நாயுடு தொடங்கி வைத்தார்.