லக்னோ: கிரிக்கெட் விளையாட்டு எந்த அளவுக்கு ஒருவரது திறமையை சோதிக்கிறதோ, அதே அளவுக்கு பொறுமையையும் சோதிக்கும் என்று தனது மகன் அர்ஜுன் டெண்டுல்கரை முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி உள்ளார்.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் தனது முதல் ஆட்டத்தில் அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடினார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக இதுதான் அவருக்கு முதல் போட்டி. இதில் 4 ஓவர்கள் வீசிய அவர், 36 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றி இருந்தார். இந்த ஆட்டத்தில் 200 ரன்கள் இலக்கை விரட்டிய பஞ்சாப் கிங்ஸ், 18 ஓவர்களில் அதை எட்டி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த ஆட்டத்துக்கு பிறகு சச்சின் டெண்டுல்கர், தனது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் ட்வீட் செய்தார். அதில் அவர் கூறியதாவது:
“மிக சிறப்பாக செயல்பட்டாய் அர்ஜுன். இந்த சீசனை நீ அணுகிய விதம் குறித்து நான் பெருமை கொள்கிறேன். உன் திறமையை நம்பி, பொறுமை காத்து, கடுமையாக உழைத்து, வாய்ப்புக்காக கடைசிப் போட்டி வரை காத்திருந்த போதிலும் பாசிட்டிவ் மனநிலையில் நீ இருந்தாய்.
கிரிக்கெட் விளையாட்டு எந்த அளவுக்கு ஒருவரது திறமையை சோதிக்கிறதோ, அதே அளவுக்கு பொறுமையையும் சோதிக்கும். இந்த இரண்டையும் மிக அழகாக கையாண்டாய். கிரிக்கெட் விளையாட்டின் மீது நீ கொண்டிருக்கும் அதே நேசத்துடன் தொடர்ந்து பயணிக்கவும்” என்று சச்சின் தெரிவித்துள்ளார்.
26 வயதான அர்ஜுன் டெண்டுல்கர், இதுவரை 6 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி உள்ளார். அதன் மூலம் மொத்தம் 4 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி உள்ளார். இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் விளையாடி வந்தார். இப்போது லக்னோ அணியில் இடம்பெற்றுள்ளார். உள்ளூர் கிரிக்கெட் கோவா அணிக்காக விளையாடுகிறார்.