மார்னஸ் லபுஷேன்
ஆஸ்திரேலியாவில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு ஆஸ்திரேலிய அணியில் பெரும் மாற்றமாக மார்னஸ் லபுஷேன் தொடரிலிருந்து நீக்கப்பட்டார். அதாவது அணித்தேர்வுக்கு லபுஷேன் பெயர் பரிசீலிக்கப்படமாட்டாது என்று அணி தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி கூறியுள்ளார்.
இதனையடுத்து மார்னஸ் லபுஷேன் தன் குவீன்ஸ்லாந்து அணிக்குத் திரும்பி அந்த அணியின் கேப்டனாக ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டிகளில் வழிநடத்த உள்ளார். இதோடு தன் ஃபார்மை மீட்கவும் அவருக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது.
புதன்கிழமை அன்று ஷெஃபீல்ட் ஷீல்ட் 4-வது சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. இது முடிந்த பிறகு நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட உள்ளது.
ஆனால் லபுஷேன் “முதல் டெஸ்ட் என்பதல்ல, மொத்த தொடருக்குமே அணித்தேர்வுக்குழுவினால் பரிசீலிக்கப்பட மாட்டார்” என்று ஜார்ஜ் பெய்லி உறுதி செய்துள்ளார்.
“இன்று நான் இதைத் தெளிவுபடுத்த விரும்பியதற்குக் காரணம், அணியில் அவரது இடம் குறித்து நிறைய ஊகங்கள் இருக்கலாம் அல்லது ஏற்கனவே இருந்திருக்கலாம் என்று நான் கருதுவதால்தான்.
எனவே, ‘ஷீல்ட்’ கிரிக்கெட் தொடரின் அடுத்தடுத்த சுற்றுகள் நடைபெறும்போது, இது அவருக்குச் சற்று அவகாசத்தை அளிப்பதோடு, அவரைச் சுற்றியுள்ள ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்று நினைக்கிறேன். ‘ஷெஃபீல்ட் ஷீல்ட்’ (Sheffield Shield) தொடரின் நான்காவது சுற்று நிறைவடைந்த பிறகு, அணியின் எஞ்சிய வீரர்களை நாங்கள் தேர்வு செய்வோம்” என்று ஜார்ஜ் பெய்லி தெள்ளத் தெளிவாகக் கூறியுள்ளார்.
கடந்த ஆஷஸ் தொடருக்காக மீண்டும் அணியில் இணைந்ததில் இருந்து, லபுஷேன் பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சராசரியாக 23.66 ரன்களை எடுத்துள்ளார். மேலும், 16 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் அடித்துள்ளார். 2023-ல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, அவரால் இதுவரை சதம் அடிக்க முடியவில்லை.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களுக்கான அணியில் இடம்பிடிக்க, லபுஷேன் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் மீண்டும் பரிசீலனைக்கு உள்ளாக வாய்ப்புள்ளதாக பெய்லி குறிப்பிட்டார்.
ஆனால், ஷெஃபீல்ட் ஷீல்ட் ஆட்டங்களை வைத்து லபுஷேனை மீண்டும் டெஸ்ட் அணியில் தேர்வு செய்வதில் பெரிய சிக்கல் உள்ளது. 2025-ல் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டபோது, குயின்ஸ்லாந்து அணிக்காக இரண்டு வெவ்வேறு வடிவங்களிலான பத்து உள்நாட்டு இன்னிங்ஸ்களில் ஐந்து சதங்களை அடித்திருந்தார். அதன் பிறகு ஆஷஸ் தொடருக்காக அவர் மீண்டும் அழைக்கப்பட்டார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரால் அதே போன்ற சிறப்பான ஆட்டத்தை மீண்டும் வெளிப்படுத்த முடியவில்லை.
எனவே லபுஷேன் டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் வருவது என்பது இப்போதைக்கு இயலாது என்றே தெரிகிறது. டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை ஏறக்குறைய முடிந்து விட்டது என்றே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரங்கள் கருதுகின்றன.