விளையாட்டு

ஸ்னிக்கோ மீட்டர் தடை செய்யப்பட வேண்டும் - ஆஸி., இங்கிலாந்து காட்டம்!

ஆர்.முத்துக்குமார்

ஆஷஸ் 3-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இதில் எட்ஜ் உண்மையில் மட்டையில் பட்டதா என்பதைச் சரிபார்க்கும் ஸ்னிக்கோ மீட்டர் கோளாறாகி சிற்சில தீர்ப்புகள் இரு அணிகளையுமே பாதிக்க, ஸ்னிக்கோ மீட்டரை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இருதரப்பினரிடமும் எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் அலெக்ஸ் கேரி 72 ரன்களில் இருந்த போது பந்து மட்டையில் லேசாக எட்ஜ் எடுத்துச் சென்றது. நடுவர் நாட் அவுட், ரிவியூ சென்றால், அங்கு ஸ்னிக்கோ மீட்டர் எட்ஜ் என்றுதான் காட்டியது ஆனால் மூன்றாவது நடுவர் அவுட் தரவில்லை. இதனால் அலெக்ஸ் கேரி 106 ரன்கள் எடுத்த பிறகே ஆட்டமிழந்தார்.

2-வது இங்கிலாந்தின் ஜேமி ஸ்மித் நேற்று மிட்செல் ஸ்டார்க் பவுன்சரை ஹூக் செய்ய முயன்று பந்து ஹெல்மெட்டில் பட்டதா, கிளவ்வில் பட்டதா என்பது சந்தேகத்துக்குரியதாக இருந்த பட்சத்தில் ஸ்னிக்கோ மீட்டர் உதவி நாடப்பட்டது. அப்போது பந்து கிளீன் ஆக கிளவ்வில் பட்டது தெரிந்தது அதையும் நாட் அவுட் என்றார் நடுவர். ஆனால் அந்தப் பந்தை கவாஜா சரியாகக் கேட்ச் எடுக்கவில்லை தரையில் பட்டு எடுத்தார் என்பது இன்னொரு புறம் என்றாலும் எட்ஜ் அல்ல என்று 3-வது நடுவர் கூறியது ஸ்டார்க்கை கோபப்படுத்தி, ‘ஸ்னிக்கோ மீட்டர் போன்ற ஒரு மோசமான தொழில்நுட்பத்தைப் பார்த்ததில்லை. அதை தடை செய்ய வேண்டும்’ என்று கூறியது மைக்கில் கேட்டது.

அன்று அலெக்ஸ் கேரி முதல் நாள் ஆட்டம் முடிந்து உள்ளே சென்று, தான் அந்தப் பந்தை எட்ஜ் செய்ததாகவும் அதிர்ஷ்டம் தன் பக்கம் என்றும் கூறியதை அடுத்து 3-வது நடுவர் தவறான ஸ்டம்ப் மைக் ஒலியை வைத்து கேரி தீர்ப்பை வழங்கினோம் தவறு என்று ஒப்புக் கொண்டார்.

மீண்டும் ஜேமி ஸ்மித் கமின்ஸ் பந்தை புல் ஷாட் ஆட முயன்ற போது ‘தின் எட்ஜ்’ ஆனது போல் தெரிந்தது. இம்முறையும் ஸ்னிக்கோ மீட்டரில் பந்து மட்டையைக் கடந்து சென்ற பிறகு எட்ஜ் போல் காட்டியது. டிவி நடுவர் இம்முறை ஸ்மித் அவுட் என்றார். எத்தனை முரண்பாடுகள்!! முதல் முறை ஸ்மித் கிளவ்வில் பட்ட போது இல்லை என்றார், இந்த முறை மட்டையைப் பந்து தாண்டிய பிறகு எட்ஜ் போல் காட்டப்பட்டது, இது நாட் அவுட் இதை அவுட் என்று தீர்ப்பளித்தார். பென் ஸ்டோக்ஸ் கடுப்பாகி விட்டார்.

நடுவர் இது போன்று 3-வது நடுவரை நாடும்போது தன் தீர்ப்பாக அவுட் அல்லது நாட் அவுட் என்று சைகை செய்து விட்டு பிறகு டிவி நடுவரிடம் தீர்ப்பிற்காக சைகை செய்வார். அந்த முறை இப்போது இல்லை. குறைந்தது அந்த முறையையாவது மீண்டும் கொண்டு வர வேண்டும் என்கிறார்கள் ஆஸ்திரேலியர்கள்.

ஹாட் ஸ்பாட், ஸ்னிக்கோ இரண்டு தொழில்நுட்பங்களில் ஹாட் ஸ்பாட் துல்லியமானது. ஆனால் எந்த நாடு போட்டித் தொடரை நடத்துகிறதோ அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் செலவு செய்து அந்தத் தொழில்நுட்பத்தை வாங்க வேண்டும், இதில் ஸ்னிக்கோ மீட்டர் கொஞ்சம் விலை குறைவு. அதனால் ஹாட் ஸ்பாட் வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளனர்.

இப்போது ‘காச் மூச்’ என்று கதறும் ஆஸ்திரேலியர்கள் அன்று ஜெய்ஸ்வாலுக்கு இதே போல் வங்கதேச மூன்றாம் நடுவர் அவுட் கொடுத்த போது அது அவுட் தான் என்றும், இங்கிலாந்தின் வாய் வீராப்பு முன்னாள் வீரர் மைக்கேல் வான், இந்தியர்கள் வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும், அது அவுட் தான் என்று கூறியதையும் இப்போது நினைவுகூர்வார்களா? வடிவேலு காமெடியில் வருவது போல் ‘தனக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி’ கதைதான்.

இதற்கிடையே இன்று 3-ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் என்ற நிலையிலிருந்து மேலும் 73 ரன்களை எடுத்து 286 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பென் ஸ்டோக்ஸ் நிதானமான இன்னிங்ஸில் 83 ரன்கள் எடுத்து மிட்செல் ஸ்டார்க் இன்ஸ்விங்கரில் பவுல்டு ஆகி வெகு கோபமாக வெளியேறினார். ஜோப்ரா ஆர்ச்சர் இன்று வந்தவுடன் நேதன் லயனை லாங் ஆனில் மிகப்பெரிய சிக்சர் விளாசினார் பிறகு அவரும் அரைசதம் எடுத்து 51 ரன்கள் எடுத்து கடைசியாக போலண்ட் பந்தில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா 272 ரன்கள் முன்னிலைப் பெற்று இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடுகிறது. வெதரால்ட், லபுஷேன், கவாஜா, கிரீன் ஆகியோர் ஆட்டமிழந்தனர்.

SCROLL FOR NEXT