விளையாட்டு

CWG 2026: பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார் லவ்பிரீத் சிங்

வட்டு எறிதலில் சீமா வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்

செய்திப்பிரிவு

கிளாஸ்கோ: 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்​தின் கிளாஸ்கோ நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவருக்​கான பளுதூக்குதலில் +110 கிலோ எடைப் பிரி​வில் இந்​தி​யா​வின் லவ்பிரீத் சிங் ஒட்​டுமொத்​த​மாக 388 கிலோ எடையை (ஸ்​னாட்ச் 176 + கிளீன் அன்ட் ஜெர்க் 212) தூக்கி வெள்ளிப் பதக்​கம் வென்​றார். நியூஸிலாந்​தின் டேவிட் ஆண்ட்ரூலிதி 389 கிலோ எடையை தூக்கி தங்​கப் பதக்​கம் வென்றார்.

பஞ்​சாபை சேர்ந்த லவ்​பிரீத் சிங் ஒரு கட்​டத்​தில் 10 கிலோ எடையை கூடு​தலாக தூக்கி முன்​னிலை​யில் இருந்​தார். ஆனால் டேவிட் ஆண்ட்ரூ லிதி தனது கடைசி முயற்​சி​யில் 223 கிலோ எடையை தூக்கி அசத்​தி​னார். அதேவேளை​யில் லவ்​பிரீத் சிங் தனது கடைசி வாய்ப் ​பில் 217 கிலோ எடையை தூக்​கத் தவறினார்.

மகளிருக்​கான +86 கிலோ எடைப் பிரி​வில் 18 வயதாகும் இந்​தி​யா​வின் மார்ட்​டினா தேவி ஸ்னாட்ச் பிரி​வில் முதல் 2 முயற்​சி​யிலும் தோல்வி அடைந்த நிலை​யில் கடைசி முயற்​சி​யில் 105 கிலோ எடையை தூக்​கி​னார். ஒட்​டுமொத்​த​மாக அவர், 245 கிலோ எடையை (ஸ்​னாட்ச் 105 + கிளீன் அன்ட் ஜெர்க் 140) தூக்​கி​னார். இருப்​பினும் கிளீன் அன்ட் ஜெர்க் பிரி​வில் 144 கிலோ மற்​றும் 146 கிலோ எடையைத் தூக்​கும் முயற்​சிகளில் சிறப்​பாக செயல்பட தவறிய​தால் கவுண்ட்​பேக் விதி​யின் அடிப்​படை​யில் நான்​காம் இடத்தை நழு​வ​விட்​டார்.

சீமா காளி​ராம்னா

மகளிருக்​கான வட்டு எறிதலில் இந்​திய வீராங்​க​னை​யான சீமா காளி​ராம்னா 3 முறை ஃபவுல் செய்த போதி​லும் அதன் பின்​னர் 58.65 மீட்​டர் தூரம் எறிந்து 3-வது இடம் பிடித்து வெண்​கலப் பதக்​கம் வென்​றார். மற்​றொரு இந்​திய வீராங்​க​னை யான நிதி ராணி 55.67 மீட்​டர் தூரம் எறிந்து 4-வது இடம் பிடித்தார். ஜமைக்​கா​வின் சமந்தா ஹால் (61.66) தங்​கப் பதக்​க​மும், கனடா​வின் ஜூலியா டங்க்ஸ் (60.67) வெள்​ளிப் பதக்​க​மும் வென்​றனர்.

தஜிந்​தர் பால் ஏமாற்​றம்

ஆடவருக்​கான குண்டு எறிதலில் இறு​திப் போட்​டி​யில் இந்​திய வீரர்​களான தஜிந்​தர்​பால் சிங் டூர் 20.27 மீட்​டர் தூர​மும், சமர்​தீப் சிங் கில் 20.03 மீட்​டர் தூர​மும் எறிந்து முறையே 5 மற்​றும் 7-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்​தனர். காமன்​வெல்த் விளை​யாட்டு வரலாற்றில் ஆடவருக்​கான குண்டு எறிதலில் இது​வரை இந்​தியா பதக்​கம் வென்​றது இல்​லை. இந்த சோகம் இம்​முறை​யும் தொடர்கிறது.

நைஜீரி​யா​வின் சுக்​வுபுக்கா எனெக்​வெச்சி 21.07 மீட்​டர் தூரம் எறிந்து தங்​கப் பதக்​கம் வென்​றார். நியூஸிலாந்​தின் டாம் வால்ஷ் (21.03) வெள்​ளிப் பதக்​க​மும், இங்​கிலாந்​தின் ஸ்காட் லிங்​கன் (20.70) வெண்​கலப் பதக்​க​மும் கைப்​பற்​றினர்.

தேஜஸ்​வின் சங்​கர்

ஆடவருக்​கான டெகத்​லானில் பதக்​கப் போட்​டி​யில் இந்​திய வீரர் தேஜஸ்​வின் சங்​கர் நீடிக்​கிறார். 5 நிகழ்​வு​களுக்​குப் பிறகு முதல் நாளின் முடி​வில் அவர், 4,339 புள்​ளி​களு​டன் 2-வது இடத்​தில் உள்ளார். தேஜஸ்​வின் சிங்​கர், கனடா​வின் டேமியன் வார்​னரை (4,353) விட 14 புள்​ளி​கள் மட்​டுமே பின்​தங்கி உள்​ளார். தேஜஸ்​வின் சங்​கர் உயரம் தாண்​டு​தலில் 2.15 மீட்​டர் உயரத்​தைத் தாண்டி 944 புள்​ளி​களைப் பெற்​றார். அதே வேளை​யில், நீளம் தாண்​டு​தலில் 7.82 மீட்​டர் தாண்டி 1,015 புள்​ளி​களை குவித்​தார்.

அனிமேஷ் குஜூர்

ஆடவருக்​கான 200 மீட்​டர் ஓட்​டம் அரை இறு​தி​யில் இந்​தி​யா​வின் அனிமேஷ் குஜூர் பந்தய தூரத்தை 20.65 வினாடிகளில் கடந்து 6-வது இடம் பிடித்து ஏமாற்​றம் அளித்​தார்.

லான் பவுல்ஸ்

லான் பவுல்ஸ் அணி​கள் பிரி​வில் இந்​தி​யா​வின் நவ்​னீத் சிங், தினேஷ் குமார் ஜோடி​யானது ஃபாக்​லாந்து தீவு​களைச் சேர்ந்த பார்ன்​ஸ், ஆலிவர் தாம்​சன் ஜோடியை 6–3, 10–1 என்ற செட் கணக்​கில் வீழ்த்​தி​யது. இந்​திய ஜோடிக்கு இது தொடர்ச்​சி​யான 4-வது வெற்​றி​யாக அமைந்​தது. தொடர்ச்​சி​யான வெற்​றிகளால் காலிறு​திக்கு நேரடி​யாக முன்​னேறு​வதற்​கான வலு​வான போட்​டி​யாளர்​களாக இந்​தி​யர்​கள் தொடர்ந்து திகழ்​கின்​றனர். இந்​திய ஜோடி தனது கடைசி லீக் ஆட்​டத்​தில் இங்​கிலாந்தை எதிர்​கொள்​கிறது.

பருல் சவுத்ரி 13-வது இடம்

மகளிருக்​கான 5 ஆயிரம் மீட்​டர் ஓட்​டத்​தில் இந்​தி​யா​வின் பருல் சவுத்ரி பந்தய தூரத்தை 15:08.56 வி​னாடிகளில் கடந்து 13-வது இடம் பிடித்து ஏமாற்​றம் அளித்​தார். ஆஸ்​திரேலி​யா​வின் ரோஸ் டேவிஸ் (14:44.53) தங்​கப் பதக்​க​மும், ஜெசிகா ஹல் (14:45.01) வெள்ளிப்​ பதக்​க​மும்​, ஸ்காட்​லாந்​தின்​ மீகன்​ கெய்த்​ (14:49.10) வெண்​கலப்​ பதக்கமும் வென்றனர்.

4x400 மீட்​டர் தொடர் ஓட்​டம்

4x400 மீட்​டர் கலப்பு தொடர் ஓட்​டத்​தின் தகுதி சுற்​றில் விஷால் டி.கே. அனிஷா பாபு, ராஜேஷ் ரமேஷ், ராஷ்தீப் கவுர் ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி பந்தய தூரத்தை 3:20.98 வினாடிகளில் கடந்து ஒட்​டுமொத்​த​மாக 7-வது இடத்தை பிடித்து இறு​திப் போட்​டிக்கு முன்​னேறியது. இறு​திப் போட்டி இன்று நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT