கன்சாஸ் சிட்டி: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் நேற்று அமெரிக்காவின் கன்சாஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கொலம்பியா - கானா அணிகள் மோதின.
ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே கானாவின் நட்சத்திர வீரர் தாமஸ் பார்ட்டி பாக்ஸிற்கு வெளியிலிருந்து இலக்கை நோக்கி வலுவான ஷாட்டை அடித்தார். ஆனால் பந்து, நூலிழையில் விலகிச் சென்றது. இதன் பின்னர் கானா அணியால் கொலம்பியாவின் பலமான தற்காப்பு அரணை உடைக்க முடியவில்லை.
14-வது நிமிடத்தில், லூயிஸ் சுவாரெஸ் வலது பக்கவாட்டில் இருந்து பாக்ஸிற்குள் ஒரு துல்லியமான கிராஸ் கொடுத்தார். அங்கு தயாராக இருந்த ஜான் அரியாஸ் பந்தை முதல் தொடுதலிலேயே கோல் வலையின் கீழ் கார்னருக்குள் செலுத்தினார். இதனால் கொலம்பியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 2-வது பாதியில் கொலம்பியாவின் லூயிஸ் டயஸ் கோல் அடித்தார். ஆனால், விஏஆர் சோதனையில் அது ஆஃப்சைடு என அறிவிக்கப்பட்டு மறுக்கப்பட்டது.
கானா அணி 8 முறை இலக்கை நோக்கி ஷாட்களை அடித்தது. ஆனால், அவற்றில் ஒன்று கூட கோலாக மாறவில்லை. கடைசி வரை போராடியும் கானா அணியால் பதிலடி கொடுக்க முடியாமல் போனது. முடிவில் கொலம்பியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியது. வரும் 6-ம் தேதி நடைபெறும் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் கொலம்பியா, சுவிட்சர்லாந்து அணியுடன் மோதுகிறது.