கேமரூன் கிரீன்

 
விளையாட்டு

கேமரூன் கிரீனுக்குக் கைகொடுத்த மரபான பேட்டிங் பாணி

ஆர்.முத்துக்குமார்

வங்கதேசத்துக்கு எதிராக டார்வினில் சொந்த மண்ணில் தனது முதல் டெஸ்ட் சதத்தை எடுத்து, தனது டெஸ்ட் பேட்டிங் ஃபார்மை மீட்டெடுத்த விதம் குறித்து கேமரூன் கிரீன் அளித்துள்ள விளக்கம், கிரிக்கெட்டின் பாரம்பரிய பாணியை விரும்பும் ரசிகர்களுக்கு நிச்சயம் இனிமையானதாக தொனிக்கவே செய்யும்.

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் மெக்காயில் நடைபெற்ற பயிற்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கிரீன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஷெஃபீல்ட் ஷீல்டு தொடரில் மேற்கு ஆஸ்திரேலிய அணிக்காக ஒரே ஒரு போட்டியில் விளையாடியதே, இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் டெஸ்ட் சதத்தை அடிக்க முக்கியக் காரணமாக அமைந்ததாகத் தெரிவித்தார்.

27 வயதான கிரீன், கடந்த மார்ச் மாதம் சிட்னியில் நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் சதம் அடித்தார். அதன்பின்னர் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற அவர், ஆஸ்திரேலியாவின் தோல்வியடைந்த டி20 உலகக் கோப்பை அணியிலும் இருந்தார்.

குறுகிய கால இடைவெளியில் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்பிய அனுபவம், ஆஷஸ் தொடர் சொதப்பல்களுக்குப் பிறகே தனது பேட்டிங்கை மீண்டும் சீரமைத்துக்கொள்ள கிரீனுக்கு உதவியது.

சமீப காலங்களில் தனது பேட்டிங்கில் செய்திருந்த சில நவீன உத்தி மாற்றங்களைக் கைவிட்டு, பாரம்பரியமான பேட்டிங் அணுகுமுறைக்கே அவர் திரும்பினார். இதே அணுகுமுறையே, ஒருகாலத்தில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிரெக் சேப்பல், கேமரூன் கிரீனை ரிக்கி பாண்டிங்குக்குப் பிறகு ஆஸ்திரேலியா கண்ட சிறந்த பேட்டிங் திறமை என்று பாராட்டச் செய்திருந்தது.

“நான் முன்பு எப்படி விளையாடினேனோ, அதற்கே மீண்டும் திரும்பி விட்டேன் என்று நினைக்கிறேன். எல்லாவற்றையும் மிகவும் எளிமையாக வைத்துக்கொண்டேன்.

கடந்த சில ஆண்டுகளில், நான் கொஞ்சம் அதிகமாக மாற்றங்களைச் செய்து பார்த்தேன். ஏதாவது ஒன்றைக் கண்டுபிடிக்க முயன்றேன்; சில விஷயங்களை சற்று கட்டாயப்படுத்தியும் விளையாடினேன்.

ஷெஃபீல்ட் ஷீல்டு கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் முன்பு எப்படி விளையாடுவேனோ, அந்த பாரம்பரிய பாணிக்கே திரும்பினேன். அது கைகொடுத்தது.

பொதுவாக, நான் பேட்டிங் செய்யும்போது சற்று முன்பக்கமாக நின்று, மிடில் ஸ்டம்ப் மீது கவனம் வைத்து, மிகவும் தெளிவான மற்றும் எளிமையான ஆட்டத் திட்டத்துடன் விளையாட விரும்புவேன். ஆனால், முந்தைய சில தொடர்களிலும் கடந்த சில ஆண்டுகளிலும், ஆஃப் ஸ்டம்ப் நோக்கி நகர்ந்து, இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே சற்று ஆக்ரோஷமாக விளையாட முயன்றேன். விஷயங்கள் இயல்பாக நடக்க அனுமதிப்பதற்குப் பதிலாக, நான் எதையாவது செய்ய வேண்டும் என்று கொஞ்சம் பலவந்தமாக ஆடினேன், அதுதான் நான் செய்த தவறாகிவிட்டது.” என்றார் கிரீன்.

தனது இயல்பான பேட்டிங் பாணிக்குத் திரும்பியது, இனிவரும் போட்டிகளில் கிரீனுக்கு பெரிதும் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், தனது பேட்டிங் அணுகுமுறையில் தான் செய்த மாற்றங்கள் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசியிருப்பது, கிரீன் போன்ற ஆல்-ரவுண்டரிடம் இருந்து ஆஸ்திரேலிய ரசிகர்கள் இனி என்ன எதிர்பார்க்கலாம் என்பதையும் கன கச்சிதமாகத் தெரிவிக்கின்றது

SCROLL FOR NEXT