சென்னை: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோதுகிறது. தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் நெருக்கடியுடன் களமிறங்குகின்றனர்.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி நடப்பு தொடரில் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது. தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியிடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்திலும், கடைசியாக நடப்பு சாம்பியனான ஆர்சிபியிடம் 43 ரன்கள் வித்தியாசத்திலும் சிஎஸ்கே அணி தோல்வி கண்டிருந்தது.
இந்த3 ஆட்டங்களையும் சிஎஸ்கே வெவ்வேறு மைதானங்களில் (குவாஹாட்டி, சேப்பாக்கம், எம்.சின்னசாமி) விளையாடி இருந்தது. இந்த சீசனை உற்சாகமற்ற தொடக்கத்துடன் ஆரம்பித்துள்ள சிஎஸ்கே வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டுமென்றால் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காண வேண்டியது அவசியம்.
தென் ஆப்பிரிக்காவின் டெவால்ட் பிரெவிஸ் இல்லாததும் அணியின் சமநிலையைப் வெகுவாக பாதித்துள்ளது. அதிரடி வீரரான பிரெவிஸ் காயத்தில் இருந்து மீண்டுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், கணுக்கால் தசைப்பிடிப்பு காரணமாக இந்த சீசனில் இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடாத எம்.எஸ். தோனி எப்போது திரும்புவார் என்பது இன்னும் தெளிவு படுத்தப்படவில்லை.
பேட்டிங்கில் சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி வலுவான தொடக்கத்தை அளிப்பது அவசியம். நடப்பு தொடரில் இவர்களிடம் இருந்து இதுவரை பெரிய அளவிலான ஆட்டம் வெளிப்படவில்லை. சஞ்சு சாம்சன் 6,7,9 ரன்களில் நடையை கட்டியிருந்தார். அதேவேளையில் ருதுராஜ் கெய்க்வாட் 6,28,7 ரன்கள் சேர்த்திருந்தார்.
இந்த ஜோடி முதல் 6 ஓவர்களில் விக்கெட்டுகளை இழக்காமல் அதிரடியாக ரன் சேர்த்தால் மட்டுமே, அடுத்து வரும் ஆயுஷ் மாத்ரே, ஷிவம் துபே போன்றவர்கள் பயமின்றி விளையாட முடியும். ஜடேஜாவுக்கு பதிலாக அணிக்குள் வந்திருக்கும் சாம்சன், அதிரடி ஆட்டத்தின் வாயிலாக மட்டுமே தனது டிரேடிங்கை நியாயப்படுத்த முடியும். கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றொரு தோல்வியை சந்தித்தால் அவர் மீது கூடுதல் அழுத்தம் உருவாகக்கூடும். இதனால் அவர், கூடுதல் பொறுப்புடன் விளையாடக்கூடும்.
மிடில் ஆர்டரில் கார்த்திக் சர்மாவும் தனது ஆட்டத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம். அதேவேளையில் கீழ் வரிசையில் பிரசாந்த் வீர் நம்பிக்கை அளித்து வருகிறார். இது ஒருபுறம் இருக்க இந்த சீசனில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சர்ஃபராஸ் கான் மட்டுமே இதுவரை பேட்டிங்கில் சீராக ரன்கள் சேர்த்து வருகிறார். ஒரு அரை சதம் உட்பட 99 ரன்கள் சேர்த்துள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் 250 ரன்களை வாரி வழங்கினர். இந்த இமாலய இலக்கு சிஎஸ்கே பேட்டர்களுக்கு எட்ட முடியாத ஒன்றாக அமைந்தது. அந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சில் கலீல் அகமதுவைத் தவிர, மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 12 ரன்களுக்கும் மேல் விட்டுக்கொடுத்து ஏமாற்றமளித்தனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் பந்துவீச்சில் சில மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது இரு ஆட்டங்களில் லக்னோ, மும்பை அணிகளை தலா 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இந்த இரு ஆட்டங்களிலும் சமீர் ரிஸ்வி அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்திருந்தார். கடைசியாக டெல்லி அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்திருந்தது. இதில் இருந்து மீண்டு வெற்றி பெறுதவற்கான முயற்சியை டெல்லி அணி எடுக்கக்கூடும்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டத்தை ‘டை’ செய்வதற்கு வாய்ப்பு இருந்தும், 5-வது பந்தில் டேவிட் மில்லர் ஒரு ரன் எடுக்க மறுத்தது இந்த சீசன் முழுவதும் ஒரு விவாதப் பொருளாகவே இருக்கக்கூடும். இருப்பினும், தனது அணிக்காக ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவைக்க முடியும் என்று தன்னைத்தானே நம்பி, இறுதியில் மிகச்சிறிய இடைவெளியில் அந்த வாய்ப்பைத் தவறவிட்ட டேவிட் மில்லர், தனது மீது விழுந்துள்ள பிம்பத்தை மாற்றும் வகையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான மட்டை வீச்சை வெளிப்படுத்த முயற்சிக்கக்கூடும்.
இது ஒருபுறம் இருக்க முதல் 2 ஆட்டங்களிலும் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தத் தவறிய கே.எல்.ராகுல் கடந்த ஆட்டத்தில் 92 ரன்கள் விளாசி கவனம் ஈர்த்தார். அவரிடம் இருந்து மீண்டும் ஒரு உயர்மட்ட செயல் திறன் வெளிப்படக்கூடும். மற்றொரு தொடக்க வீரரான பதும் நிசங்காவும் நம்பிக்கை அளிக்கக்கூடியவராக திகழ்கிறார். 3-வது இடத்தில் களமிறங்கும் நிதிஷ் ராணாவும் பார்முக்கு திரும்பினால் அணியின் பேட்டிங் கூடுதல் வலுப்பெறும்.
பந்துவீச்சை பொறுத்தவரையில் கடந்த ஆட்டத்தில் வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார் 4 ஓவர்களை வீசி 55 ரன்களை வாரி வழங்கினார். இதனால், பவர்பிளேவில் அவர், தனது திட்டங்களை மாற்றி அமைக்கக்கூடும். மிட்செல் ஸ்டார்க் இல்லாத நிலையில், டி20 உலகக்கோப்பையிலிருந்து தனது சிக்கனமான பந்துவீச்சைத் தொடர்ந்து வரும் லுங்கி நிகிடி இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும்.
பஞ்சாப் ஹைதராபாத் மோதல்
முன்னதாக பிற்பகல் 3.30 மணிக்கு முலான்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் அணி 3 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 5 புள்ளிகளை பெற்றுள்ளது. ஹைதராபாத் அணி 3 ஆட்டத்தில் விளையாடி 1 வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளிகளை பெற்றுள்ளது.
நேருக்கு நேர்
31 ஆட்டங்கள்
19 சிஎஸ்கே - வெற்றி
12 டெல்லி கேப்பிடல்ஸ் - வெற்றி