சென்னை: சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நாளை (2-ம் தேதி) தொடங்குகிறது. வரும் 8-ம் தேதி வரை நடைபெற உள்ள இப்போட்டிக்கான டிரா நேற்று வெளியிடப்பட்டது.
இதில் வைல்டு கார்டு மூலம் களமிறங்கும் இந்தியாவின் வைஷ்ணவி அத்கர் முதல் சுற்றில் பிரிட்டனின் ஜோடி பரேஜுடன் மோதுகிறார். பரேஜ் தற்போது உலகத் தரவரிசையில் 471-வது இடத்தில் உள்ளார். அதேவேளையில் வைஷ்ணவி 334-வது இடம் வகிக்கிறார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான சஹாஜா யமலபள்ளி, 128-வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் சிமோனா வால்டர்ட்டை எதிர்கொள்கிறார். இவர்களுடன் இந்திய வீராங்கனை மாயா ராஜேஸ்வரன் ரேவதிக்கு முதல் சுற்றிலேயே கடும் சவால் காத்திருக்கிறது. அவர் 106-வது இடத்தில் உள்ள போலந்தின் கேத்தரினா காவாவுடன் மோதுகிறார். காவா இத்தொடரில் 8-ம் நிலை வீராங்கனையாக உள்ளார்.
இந்தோனேசியாவின் ஜானிஸ் டியன் முதல் நிலை வீராங்கனையாகவும், ஆஸ்திரியாவின் லில்லி டாகர் 2-ம் நிலை வீராங்கனையாகவும் களமிறங்குகின்றனர்.