அகமதாபாத்: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் இறுதிப் போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி, 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணி அதிரடி பாணியை பின்பற்றக்கூடியது. அதேவேளையில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி நிதானமாக செயல்படும் திறன் கொண்டது. இரு அணிகளும் 2-வது முறையாக கோப்பையை வெல்லும் கனவுடன் களமிறங்குகின்றன.
லீக் சுற்றில் ஆர்சிபி அணி முதலிடம் பிடித்து அசத்தியிருந்தது. தொடர்ந்து தகுதி சுற்று 1-ல் குஜராத் டைட்டன்ஸ் அணியை 92 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றிருந்தது. மறுபுறம் முதல் வாய்ப்பை தவறவிட்ட குஜராத் அணி தகுதி சுற்று 2-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்துள்ளது.
புள்ளிவிவரப்படி நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி, 2022-ம் ஆண்டு கோப்பையை வென்ற குஜராத் அணிக்கு எதிராக வெற்றி பெற அதிக வாய்ப்புள்ள அணியாகக் கருதப்படுகிறது. இதற்கு ஆர்சிபி அணி இந்தத் தொடரில் இதுவரை விளையாடி வரும் அதிரடி ஆட்டமுறையே முக்கியக் காரணமாகும்.
இந்த அதிரடி ஆட்டமுறை சில நேரங்களில் அவர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்திய போதிலும், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், டிம் டேவிட், கேப்டன் ரஜத் படிதார், பில் சால்ட், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தங்களது அதிவேக பேட்டிங் மூலம் எதிரணிகளைத் தொடர்ந்து துவம்சம் செய்து வந்துள்ளனர்.
ஆடுகளங்களின் தன்மை, எதிரணிகளின் பந்துவீச்சு உத்திகள் எதுவுமே, இவர்களின் அதிரடித் தாக்குதல் ஆட்டமுறையை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. மேலும், நடப்பு ஐபிஎல் தொடரில் இவர்களைப் போல வேறு எந்த ஒரு அணியும் அதிக அளவில் 200 ரன்களுக்கு மேல் குவித்தது இல்லை.
கடந்த இரண்டு சீசன்களாக ஆர்சிபி ஒரு நிலையான அணியாக உருவெடுத்திருப்பதற்கு, கேப்டனாக ரஜத் படிதாரின் நிதானமான அணுகுமுறையும் ஒரு முக்கியக் காரணமாகும்.
முன்னாள் கேப்டன்களான விராட் கோலி அல்லது டு பிளெசிஸ் போன்று ரஜத் பட்டிதார் களத்தில் உணர்ச்சிகளை அதிகமாக வெளிப்படுத்தக்கூடியவர் கிடையாது. அதேவேளையில் 32 வயதான அவரிடம் தனித்துவமான நிதானமும் நம்பிக்கையும் உள்ளது. இது அணியில் உள்ள சர்வதேச சூப்பர் ஸ்டார் வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் என இருதரப்பினரையும் பதற்றமின்றி, நிம்மதியாக வைத்திருக்க உதவுகிறது.
ஆர்சிபி அணி பவர்பிளே ஓவர்கள் முதலே எதிரணி பேட்டர்களை ரன் குவிக்க விடாமல் கட்டுப்படுத்தும் பந்துவீச்சுப் பட்டாளத்தையும் கொண்டுள்ளது. புவனேஷ்வர் குமார் தலைமையிலான இந்தப் பந்துவீச்சுப் படை, மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கும் குஜராத் அணியின் டாப்-ஆர்டர் பேட்டர்களுக்கு எதிராக தங்களது உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த வேண்டியிருக்கும்.
பேட்டர்கள் அனைவரும் பவர்பிளே ஓவர்களைச் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி ஓவருக்கு 11 அல்லது 12 ரன்களுக்கு மேல் குவித்து வந்த இந்தத் தொடரில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ஷுப்மன் கில், சாய் சுதர்சன் ஜோடியோ தங்களது ரன் வேட்டையை ஓவருக்கு 9 ரன்களுக்கு சற்று மேலாக மட்டுமே சேர்த்து வந்துள்ளனர்.
பவர்பிளே ஓவர்களில் நிதானமான மற்றும் படிப்படியான ரன் குவிப்பு என்ற பழமையான ஆட்ட அணுகுமுறையை குஜராத் அணி கையாண்டு வருகிறது. இதற்கு காரணம் என்னவென்றால், குஜராத் அணியின் மிடில்-ஆர்டர் பேட்டிங் சற்று பலவீனமாக இருப்பதே ஆகும். இதனால், முதல் மூன்று வரிசை வீரர்களான ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஜாஸ் பட்லர் ஆகியோரே அணியின் ஒட்டுமொத்தப் பொறுப்பையும் ஏற்று ரன் குவிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இந்த வகையில், நடப்பு தொடரில் ஷுப்மன் கில் 163 ஸ்டிரைக் ரேட்டுடன் 722 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதம், 6 அரை சதங்கள் அடங்கும். சாய் சுதர்சன் 159 ஸ்டிரைக் ரேட்டுடன் 710 ரன்களும் (ஒரு சதம், 8 அரை சதம்), ஜாஸ் பட்லர் 157 ஸ்டிரைக் ரேட்டுடன் 507 ரன்களும் (4 அரை சதங்கள்) குவித்துள்ளனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல்திறன் வெளிப்படக்கூடும்.
நடப்பு சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணி தங்களது சொந்த மைதானத்தில் 7 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இது அந்த அணிக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுக்கக்கூடும். எனினும் அது அவ்வளவு எளிதாகவும் இருக்காது. ஏனெனில் ஆர்சிபி அணியில் நடப்பு சீசனில் 26 விக்கெட்களை வீழ்த்தியுள்ள புவனேஷ்வர் குமார் தனது அனுபவத்தால் பவர்பிளேவில் விக்கெட்களை வீழ்த்தி அசத்தி வருகிறார்.
அவருக்கு ஜோஷ் ஹேசில்வுட் (13 விக்கெட்டுகள்), ரசிக் சலாம் (16 விக்கெட்டுகள்), கிருணல் பாண்டியா (13 விக்கெட்டுகள்) ஆகியோர் உறுதுணையாக இருந்து வருகின்றனர். இவர்கள் ஒருங்கிணைந்து பன்முகத்தன்மை கொண்ட பந்துவீச்சுப் படையை உருவாக்கியுள்ளனர். இதில் கிருணல் பாண்டியா பேட்டிங்கிலும் பயனுள்ள வகையில் பங்களிப்பை வழங்கி வருகிறார்.
ஆர்சிபி அணியின் பேட்டிங் வரிசையின் ஆழம் மற்றும் மைதானத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பந்துகளைச் சிதறடிக்கும் அதிரடி ஆட்டக்காரர்கள் தொடக்கம் முதல் இறுதி வரை நிறைந்திருப்பது, அவர்களுக்கு சாதகமாக உள்ளது. ஆனால், அகமதாபாத் ஆடுகளம் பந்துவீச்சுக்குச் சாதகமாக அமைந்தால் ஆர்சிபி அணியின் அதிரடி பேட்டர்களைக் கட்டுப்படுத்துவதற்கான திறமையான பந்துவீச்சாளர்கள் குஜராத் அணியில் உள்ளனர்.
நடப்பு சீசனில் அதிக விக்கெட்கள் வீழ்த்தி உள்ளவர்களின் பட்டியலில் 28 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருக்கும் காகிசோ ரபாடாவுக்கு, முகமது சிராஜ், ரஷித் கான், ஜேசன் ஹோல்டர், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் பக்கபலமாக இருந்து வருகின்றனர். ரபாடாவும் சிராஜும் இந்த சீசனில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பந்துவீச்சு திறனை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இவர்கள் முறையே 165 மற்றும் 162 டாட் பால்களை வீசி அதிக டாட் பால்கள் வீசிய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் டாப்பில் உள்ளனர். பேட்டிங்கிற்கு சாதகமான தட்டையான ஆடுகளங்களில் கூட பேட்டர்களை இவர்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தி உள்ளனர்.
இந்த ஜோடி ஹார்ட் லென்த் (பேட்டர்களுக்கு சற்று எட்டாதவாறு ஆடுகளத்தில் பந்தை வேகமாக குத்தி எறிவது) உத்தியை மிகத் துல்லியமாகப் பயன்படுத்திப் பலன் கண்டுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் பேட்டிங் வரிசைக்கு இவர்கள் அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனாக இருந்து பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகள் மட்டுமே தன்வசம் வைத்துள்ளன. இன்றைய இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெறும் பட்சத்தில் இந்த வகை சாதனையில் அந்த அணியும் இணையும்.
ரூ.20 கோடி பரிசுத் தொகை
ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு சாம்பியன் கோப்பையுடன் ரூ.20 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது. 2-வது இடத்தை பெறும் அணி ரூ.12.50 கோடியை பரிசாக பெறும்.
‘தொடரை வெல்ல சிறந்த பந்துவீச்சு தேவை’
ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறியதாவது: தொடரை வெல்ல விரும்பினால், உங்களுக்கு மிகச் சிறந்த பந்துவீச்சுப் படை தேவை. விக்கெட்டுகளை வீழ்த்துவது மிகவும் முக்கியம். ஏனெனில், 200 முதல் 220 ரன்கள் வரை எடுப்பது மிகவும் எளிது. ஆனால், அந்த ரன்களை எதிரணி அடிக்காமல் தடுத்து நிறுத்துவது மிகக் கடினம். எனவே, சிறந்த பந்துவீச்சு குழு இருக்க வேண்டியது அவசியம்.
புவனேஷ்வர் குமார் பிரமாதமாகப் பந்துவீசி வருகிறார். அவர், அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர். மதிப்புமிக்க இந்தத் தொடரில் சிறப்பாக பந்துவீசுவது என்பது அவ்வளவு எளிதல்ல. அவரிடம் ஆட்டத்தைப் பற்றிய மிகத் தெளிவான பார்வை இருக்கிறது. அவருடைய திட்டமிடல்களும் உத்திகளும் தெளிவாக உள்ளன.
புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட் போன்ற முன்னணி பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் மற்ற பந்துவீச்சாளர்களின் ஆதரவும் தேவைப்படுகிறது. அந்த வகையில், ரசிக் சலாம் திருப்புமுனைகளை ஏற்படுத்தி அணிக்கு உதவிய விதம் முக்கியமானது. ஏனெனில், வெறும் ஒன்றுஅல்லது இரண்டு பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்துக்கொண்டு தொடரை வெல்ல முடியாது.
பில் சால்ட் விளையாடுவது குறித்து நாங்கள் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. தகுதி சுற்று 1 ஆட்டத்துக்கு பிறகு, எங்களுக்கு ஓய்வெடுப்பதற்கும் உடல்நலனை மீட்டெடுப்பதற்கும் போதுமான நேரம் கிடைத்தது. அதே நேரத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணி தகுதி சுற்று 2 போட்டியை முடித்துவிட்டு ஓய்வின்றி இறுதிப் போட்டியில் கலந்துகொள்கிறது. இந்த வகையில், எங்களுக்கு ஓரளவுக்குச் சாதகமான சூழல் இருக்கும், ஆனால் அது மிகப்பெரிய அளவில் இருக்காது. ஏனென்றால், இரண்டு அணிகளுமே மிகவும் பலமானவை, அதுமட்டுமின்றி மிகச் சிறந்த கிரிக்கெட்டையும் விளையாடி உள்ளோம். இவ்வாறு ரஜத் பட்டிதார் கூறினார்.
‘மன உறுதியே வெற்றி கொடுக்கும்’
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் கூறியதாவது: எதிர்பார்ப்புகளின் சுமையை நான் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. நாங்கள் அகமதாபாத்தில் விளையாடும்போது எங்களுக்கு சில நன்மைகளும், நன்கு பழகிய சூழலும் கிடைக்கின்றன. ஏனெனில், இங்கிருக்கும் ஆடுகளத்தைப் பற்றியும், மைதானத்தைப் பற்றியும் நாங்கள் நன்றாக அறிவோம். எனவே, போட்டியில் வெற்றி பெற இங்கு எந்த மாதிரியான கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பதும் எங்களுக்கு தெளிவாகத் தெரியும்.
அந்த வகையில் சொந்த மைதானத்தில் விளையாடுவதை சாதகமான அம்சமாகவே பார்க்கிறேன். தகுதி சுற்று 1 போட்டி நடைபெற்ற தரம்சாலா என்பது சென்றடைவதற்கும், பயணம் செய்வதற்கும் சற்று கடினமான இடம். அதனால் உடல் ரீதியாக ஆர்சிபி அணி சாதகமான நிலையை பெற்றிருக்கலாம். ஆனால் இறுதிப் போட்டி என்பது முழுக்க முழுக்க மன உறுதி சார்ந்தது. சவாலை எதிர்கொள்ள மனரீதியாக யார் மிக உறுதியாக இருக்கிறார்களோ, அந்த அணியே வெற்றி பெறும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், நாங்கள் ஒவ்வொரு ஓவரிலும் பவுன்சர்களை சிறப்பாகப் பயன்படுத்தினோம். நாங்கள் வீசிய பவுன்சர்களின் துல்லியத்தை இதற்கு முன்பு நான் டி20 போட்டியில் பார்த்தது இல்லை. நாங்கள் பயன்படுத்திய பவுன்சர்களின் எண்ணிக்கையும், அதன் மூலம் எங்களுக்குக் கிடைத்த வெற்றியும் உண்மையிலேயே அபாரமானது. இவ்வாறு ஷுப்மன் கில் கூறினார்.