கேப் வெர்டே அணி வீரர்கள்

 
விளையாட்டு

‘தோல்வியின்றி வரலாறா’ - கேப் வெர்டே அணி விதைத்த நம்பிக்கை | FIFA WC 2026

வேட்டையன்

நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப் வெர்டே அணி, உலக மக்களுக்கு எதுவும் சாத்தியம் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. அந்த அணியின் உத்வேக கதை குறித்து பார்ப்போம்.

கேப் வெர்டே நாட்​டின் மக்​கள் தொகை சுமார் 5.25 லட்​சம் மட்டும்​தான். கடந்த ஆண்டு நவம்பரில் ஆப்பிரிக்க மண்டல பிரிவுக்கான உலகக் கோப்பை தகுதிச் சுற்று மூலம் தொடரில் பங்கேற்பதற்கான தகுதியை பெற்றது. அப்போது அது பேசு பொருளானது. ஏனெனில், உலகக் கோப்பை கால்​பந்து தொடருக்கு முன்​னேறிய மிகக்​குறைந்த அளவி​லான மக்​கள்​தொகை கொண்ட நாடுகளின் பட்​டியலில் 2-வது இடத்​தைப் பிடித்​தது கேப் வெர்​டே.

இந்த சூழலில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக அந்த அணி பங்கேற்றது. ‘குரூப்-ஹெச்’ பிரிவில் அந்த அணி இடம்பெற்றது. இதே பிரிவில் ஸ்பெயின், உருகுவே, சவூதி அரேபியா உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றிருந்தன. இந்த அணிகளுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தது அந்த அணி. குறிப்பாக அந்த அணியின் கோல் கீப்பர் வோசின்ஹா, தனது அபார ஆட்டத்தின் மூலம் கவனம் ஈர்த்தார்.

நாக்-அவுட் சுற்றில் அர்ஜெண்டினா அணிக்கு எதிராக 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவி வெளியேறியது. இருப்பினும் அந்த அணி விதைத்துள்ள நம்பிக்கை மிகப்பெரியது.

“எங்களை போல சின்னஞ்சிறு நாடுகளால் என்ன செய்ய முடியும் என்பதை எங்கள் ஆட்டத்தின் மூலம் வெளிப்படுத்தி உள்ளோம். கனவு கண்டால் எதுவும் சாத்தியம் என்ற நம்பிக்கையை பல்வேறு மனங்களில் நாங்கள் பதித்துள்ளோம். நிச்சயம் எங்கள் தேசத்தில் இளம் வீரர்களுக்கு இது உத்வேகம் தரும். இந்த மேடையில் என்ன செய்ய முடியும் என்பதை வெளிப்படுத்தினோம். உலகின் சிறந்த அணிகளுடன் விளையாடினோம். உலக வரைபடத்தில் கேப் வெர்டே எங்கு உள்ளது என்பதை உலக மக்கள் இப்போது அறிவார்கள். நாங்கள் எத்தகைய அணி என்பதை அறிவார்கள்” என்று அந்த அணியின் தடுப்பாட்ட வீரர் பிகோ லோப்ஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்பெயின் அணிக்கு எதிராக கேப் வெர்டே அணியின் காப்பானாக செயல்பட்டார் வோசின்ஹா. 40 வயதான அவரை இன்ஸ்டாகிராம் தளத்தில் சுமார் 19 மில்லியன் பேர் இப்போது பின்தொடர்கின்றனர். இந்த ஆட்டத்துக்கு முன்பாக ஐம்பதாயிரம் பேர் மட்டுமே அவரை பின்தொடர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“உலகக் கோப்பை தொடரில் விளையாடுவது என்பது எங்களது நெடுங்கால காத்திருப்பு. நாங்கள் தகுதி பெற்று, அந்த கனவை மெய்ப்பட செய்தோம். இது எங்கள் அணிக்கானது மட்டுமல்ல கேப் வெர்டே மக்களுக்கானது. இந்த தொடரில் நாங்கள் எட்ட முடிந்த உயரத்தை எட்டி பெருமை கொள்கிறோம். அடுத்த சுற்றுக்கு முன்னேற விரும்பினோம். ஆனால், நாக்-அவுட் ஆட்டத்தின் முடிவு எங்களுக்கு ஏமாற்றம் தந்தது.

உலக சாம்பியனை எதிர்கொண்டோம் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், இந்நேரத்தில் எங்கள் அணியினர், கால்பந்து கூட்டமைப்பு நன்றி சொல்ல விரும்புகிறேன். எங்கள் அணியின் வீரர்கள் மிக சிறப்பாக செயல்பட்டனர். நாங்கள் பெருமிதத்துடன் வெளியேறுகிறோம்” என்று வோசின்ஹா தெரிவித்தார்.

“எங்கள் நாடு சிறியதுதான். அது வரைப்படத்தில்தான் சிறியது. பெரிய மனம் கொண்டு ஒரு சிறிய நாடு” என்று உலகக் கோப்பை தொடர் குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் புபிஸ்டா தெரிவித்துள்ளார்.

கேப் வெர்டே அணி தனது அபார ஆட்டத்தின் மூலம் உலகத்துக்கு தாங்கள் யார் என்பதை நிரூபித்துள்ளது. அதுவே அவர்களுக்கான வெற்றிதான். தோல்வியின்றி வரலாறு கிடையாது.

SCROLL FOR NEXT