ஜஸ்பிரீத் பும்ரா
புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹர்ஷித் ராணா காயம் குணமடையாததால் விலகி உள்ளார். அவருக்கு பதிலாக யாஷ் தாக்குர் சேர்க்கப்பட்டுள்ளார். அதேவேளையில் ஜஸ்பிரீத் பும்ரா முழு உடற்தகுதியை எட்டி உள்ளார்.
இங்கிலாந்து தொடரின் போது தொடை பகுதியில் ராணாவுக்கு காயம் ஏற்பட்டு இருந்தது. பெங்களூருவில் உள்ள பிசிசிஐ உயர்திறன் மையத்தில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கடந்த 7-ம் தேதி மாதிரி சோதனை நடத்தப்பட்டது. அப்போது பந்துவீசிய ஹர்ஷித் ராணாவுக்கு தொடை பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர், ஆப்கானிஸ்தான் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து விலகி உள்ளார்.
அவருக்கு பதிலாக 27 வயதாகும் விதர்பாவை சேர்ந்த யாஷ் தாக்குர் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் ஜிம்பாப்வே தொடரில் யாஷ் தாக்குர் 2 ஆட்டங்களில் விளையாடி 4 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். இது ஒருபுறம் இருக்க முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா முழு உடற்தகுதியை எட்டி உள்ளார். இதனால் அவர், ஆப்கானிஸ்தான் மற்றும் ஆசிய விளையாட்டில் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருடன் நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் உடற்தகுதியை எட்டி உள்ளனர். இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி வரும் 13-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. ஆசிய விளையாட்டில் இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 28-ம் தேதி விளையாடுகிறது. முன்னதாக 22-ம் தேதி ஜப்பான் அணிக்கு எதிராக இந்திய அணி டி20 ஆட்டம் ஒன்றில் விளையாட உள்ளது.