புதுடெல்லி: பில்லி ஜீன் கிங் கோப்பைக்கான ஆசியா-ஓசியானா குரூப் 1 டை போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நேற்று முன்தினம் தாய்லாந்தை எதிர்த்து விளையாடியது.
இதில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் வைஷ்ணவி அட்கர் 1-6, 3-6 என்ற செட் கணக்கில் அஞ்சிசா சாண்டாவிடம் தோல்வி அடைந்தார். இதன் பின்னர் மழை காரணமாக எஞ்சிய போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இந்த ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. 2-வதாக நடைபெற்ற ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் சஹஜா யாமளப்பள்ளி 4-6, 6-1, 4-6 என்ற செட் கணக்கில் பட்சரின் சீப்சண்டேஜிடம் தோல்வி அடைந்தார்.
கடைசியாக நடைபெற்ற இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் ருதுஜா போஸ்லே, அங்கிதா ரெய்னா ஜோடி 6-3, 6-4 என்ற செட் கணக்கில் தாசபோர்ன் நக்லோ, பியாங்டார்ன் பிளிபுயெச் ஜோடியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பெற்றது. முடிவில் இந்த மோதலில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
இதைத் தொடர்ந்து இந்திய அணி தனது 2-வது மோதலில் நியூஸிலாந்துடன் விளையாடியது. இதில் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் வைஷ்ணவி அட்கர் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஐஷி தாஸையும், சஹஜா யாமளப்பள்ளி 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வெலன்டினா இவானோவையும் வீழ்த்தினார். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ருதுஜா போஸ்லே, அங்கிதாரெய்ஜோடி 6-4, 6-2 என்ற செட் கணக்கில் மோனிக் பார்ரி, எரின் ரவுட்லிஃப் ஜோடியை தோற்கடித்தது. இதன் மூலம் இந்த மோதலில் இந்திய அணி 3-0 என வெற்றி பெற்றது.