இங்கிலாந்து வீரர் பென் டக்கெட்
ஆஷஸ் தொடரை இங்கிலாந்து 3-0 என்று இழந்ததையடுத்து 2-வது டெஸ்ட் மற்றும் 3-வது டெஸ்ட்டிற்கு இடையே பயிற்சியில் கவனம் செலுத்தாமல் நூசா கடற்கரையிலும் விடுதியிலும் ‘மது’ பார்ட்டியில் இங்கிலாந்து வீரர்கள் குடித்துத் திளைத்ததாக எழும் செய்திகளையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எரியும் நெருப்பில் எண்ணையை வார்ப்பது போல் இப்போது பென் டக்கெட் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு அணி தங்கியிருக்கும் விடுதிக்கான வழி தெரியாமல் திண்டாடியதாக வெளியான வீடியோவும் இங்கிலாந்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் ராபர்ட் கீ ஏற்கெனவே நூசா ‘மது’ பார்ட்டி குறித்து விசாரணைக்கு உத்தரவிட, இப்போது எக்ஸ் தளத்தில் வெளியான பென் டக்கெட் போதைத் தள்ளாட்ட வீடியோவும் சேர்ந்து பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
நூசா கடற்கரைக் கொண்டாட்டம் பிரெண்டன் மெக்கல்லத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது, இந்தப் பயணம் இங்கிலாந்து வீரர்களுக்கு புத்துணர்வு அளிக்கும் என்று ’நல்லவிதமாக’ அவர் யோசித்ததாகக் கருதப்பட்டாலும், தோல்வியினால் அவரது ‘நல்லெண்ணமும்’ இப்போது கேள்விக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், குடிபோதை குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக ஊடகங்களில் வட்டமிடும் விஷயங்களை அறிவோம்.
வீரர்களின் நடத்தை குறித்து எங்களுக்கு உயரிய எதிர்பார்ப்பு உள்ளது. வீரர்களின் நடத்தை எதிர்பார்ப்புக்குக் கீழே இருக்கும்போது நிச்சயம் துருவுவோம். உதவி தேவைப்படும் வீரர்களுக்கு உதவத் தயாராக இருக்கிறோம். சோஷியல் மீடியா செய்திகள் உண்மைதானா என்பதை சரிபார்ப்பதற்கு முன் நாங்கள் இது தொடர்பாக மேலும் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை” என்று கூறியுள்ளது.
இங்கிலாந்தின் சமீப காலங்களில் நம்பகமான ஆக்ரோஷ தொடக்க வீரராக பென் டக்கெட் திகழ்ந்து வருகிறார், ஆனால் ஆஷஸ் தொடரில் இதுவரை 97 ரன்களை 16.16 என்ற சராசரியில் எடுத்துள்ளார். டாப் ஸ்கோர் வெறும் 29 தான். பென் டக்கெட் குடி விவகாரம் இப்போது எழுவதல்ல.
8 ஆண்டுகளுக்கு முன்பாக ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து லயன்ஸ் அணியில் பென் டக்கெட் ஆடினார். அப்போது பெர்த்தில் உள்ள அவென்யூ மதுபானக் கூடத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது மதுவை ஊற்றினார் என்பதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டு ஊரைப் பார்க்க அனுப்பி வைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.