விளையாட்டு

இந்​திய டெஸ்ட் அணிக்​காக பயிற்​சி​யாளர் மாற்​ற​மா? - கிரிக்​கெட் கட்டுப்​பாட்டு வாரி​யம் மறுப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​திய டெஸ்ட் கிரிக்​கெட் அணிக்​காக பயிற்​சி​யாளர் மாற்​றப்​படப் போகிறார் என்ற செய்​தியை இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யம்​(பிசிசிஐ) மறுத்​துள்​ளது.

இந்​திய அணி​யின் தலை​மைப் பயிற்​சி​யாளர் கவுதம் கம்​பீர், கடந்த ஆண்டு ஜூலை​யில் நியமிக்​கப்​பட்​டார். தலை​மைப் பயிற்சி​யாள​ராக கவுதம் கம்​பீர் நியமிக்​கப்​பட்ட பிறகு, இந்​திய அணி குறிப்​பிடத்​தகுந்த முன்​னேற்​றங்​களை​யும், சரிவை​யும் சந்தித்து வரு​கிறது.

கவுதம் கம்​பீரின் தலை​மை​யின் கீழ், இந்​திய அணி ஒரு​நாள், சர்​வ​தேச டி20 போட்​டிகளில் மிக​வும் சிறப்​பாக செயல்​பட்டு பல்​வேறு வெற்​றிகளைக் குவித்து வரு​கிறது. அவரது பயிற்​சி​யின் கீழ் இந்​திய அணி ஐசிசி சாம்​பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பை ஆகிய போட்​டிகளில் சாம்​பியன் பட்​டத்​தைக் கைப்​பற்றி சாதனை படைத்​தது. ஆனால், கம்​பீரின் வரு​கைக்​குப் பிறகு டெஸ்ட் போட்​டிகளில் இந்​திய அணி குறிப்​பிடத்​தக்க வெற்​றிகளைப் பெற​வில்லை என்​பது விமர்​சகர்​களின் கருத்​தாக உள்​ளது.

டெஸ்ட் போட்​டிகளில் சேனா நாடு​களுக்கு (தென் ஆப்​பிரிக்​கா, இங்​கிலாந்​து, நியூஸிலாந்​து, ஆஸ்​திரேலி​யா) எதி​ராக இந்​திய அணி 10 போட்​டிகளில் தோல்வி அடைந்​துள்​ளது.

மேலும், இந்த ஆண்​டில் சொந்த மண்​ணிலேயே நியூஸிலாந்​துக்கு எதி​ராக முழு​மை​யாக டெஸ்ட் தொடரை இந்​திய அணி இழந்​தது. இதையடுத்து இந்​திய அணிக்கு எதி​ராக​வும், கம்​பீருக்கு எதி​ராக​வும் கடுமை​யான விமர்​சனங்​கள் எழுந்​தன. மேலும், அண்​மை​யில் சொந்த மண்​ணிலேயே தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான டெஸ்ட் தொடரை​யும் 0-2 என்ற கணக்​கில் இந்​தியா முழு​மை​யாக இழந்தது.

இதனால் இந்​திய கிரிக்​கெட் அணி வீரர்​கள் மீதும், கம்​பீர் மீதும் கடும் விமர்​சனங்​கள் முன்​வைக்​கப்​பட்​டன. இதைத் தொடர்ந்​து, டெஸ்ட் போட்​டிகளுக்​கான இந்​திய அணிக்கு புதிய பயிற்​சி​யாளரை நியமிக்க பிசிசிஐ பரிசீலித்து வரு​வ​தாக செய்​தி​கள் வந்தன.

டெஸ்ட் போட்​டிகளுக்​கான இந்​திய அணி​யின் பயிற்​சி​யாளர் பொறுப்​புக்கு முன்​னாள் வீரர் விவிஎஸ் லஷ்மனை பிசிசிஐ சார்​பில் அதி​காரபூர்​வ​மற்ற முறை​யில் அணுகிய​தாகக் கூறப்​படு​கிறது. ஆனால், டெஸ்ட் போட்​டிகளுக்​கான பயிற்​சி​யாளர் பொறுப்பை ஏற்​றுக்​கொள்ள லஷ்மண் ஆர்​வம் காட்​ட​வில்லை என்​றும் தெரிய​வந்​துள்​ளது.

கம்​பீரின் பதவிக்​காலம் வரும் 2027-ம் ஆண்டு நடை​பெறவுள்ள ஐசிசி ஒரு​நாள் உலகக் கோப்​பைத் தொடர் வரை உள்​ளது. இருப்​பினும், எதிர்​வரும் ஐசிசி டி20 உலகக் கோப்​பைத் தொடரில் இந்​திய அணி எவ்​வாறு செயல்​படு​கிறது என்​ப​தைப் பொறுத்து பயிற்​சி​யாளர் மாற்​றப்​படலாம் என்​றும் செய்​தி​கள் அடிபடு​கின்​றன.

உலக டெஸ்ட் சாம்​பியன்​ஷிப் இறு​திப்​போட்டி வரும் 2027-ம் ஆண்டு நடை​பெறவுள்​ளது. இதற்​கிடை​யில், இந்​திய அணி 9 டெஸ்ட் போட்​டிகளில் விளை​யாட​வுள்​ளது. இலங்கை மற்​றும் நியூஸிலாந்து அணி​களுக்கு எதி​ராக தலா 2 போட்​டிகள் கொண்ட தொடர்​களி​லும், ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ராக 5 போட்​டிகள் கொண்ட தொடரிலும் இந்​திய அணி விளை​யாட​வுள்​ளது.

உலக டெஸ்ட் சாம்​பியன்​ஷிப் இறு​திப்​போட்​டிக்கு இந்​திய அணி முன்​னேற வேண்​டு​மா​னாலும் இந்த 9 போட்​டிகளி​லும் குறிப்பிடத்தக்க வெற்​றியை இந்​திய அணி பெறவேண்​டும். இதனால் டெஸ்ட் போட்​டிக்கு தனி பயிற்​சி​யாளர் நியமிக்கப்படுகிறார் என்ற செய்​தி​கள் மீண்​டும் பலமாக அடிபட்டன. ஆனால், டெஸ்ட் போட்​டிகளுக்​காக தனி பயிற்சியாளரை நியமிக்​கப் போவ​தில்லை என்று பிசிசிஐ செயலர் தேவஜித் சைக்​கியா தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து நேற்று அவர் மேலும் கூறிய​தாவது: டெஸ்ட் போட்டிகளுக்​காக தனி​யாக பயிற்​சி​யாளரை நியமிக்​கப் போவதாக​வும் அதற்​காக பிசிசிஐ சார்​பில் முன்​னாள் வீரர் விவிஎஸ் லஷ்மனை அணுகிய​தாக​வும் செய்​தி​கள் வந்​துள்​ளன. இந்​தச் செய்​தி​களில் உண்​மை​யில்​லை. இவை அடிப்​படை ஆதாரமற்​றவை. தனி பயிற்​சி​யாள​ருக்​காக பிசிசிஐ யாரை​யும் அணுக​வில்​லை. புதிய பயிற்​சி​யாளரை பிசிசிஐ நியமிக்கப்போவதும் இல்​லை.

ஊகங்​களின் அடிப்​படை​யில் இந்​தச் செய்​தி​கள் வெளிவந்துள்ளன. சில நம்​பகம் வாய்ந்த செய்தி நிறு​வனங்​கள் இது​போன்ற செய்​தி​களை வெளி​யிட்​டுள்​ளன. ஆனால் இதில் உண்மை​யில்​லை. இந்​தச் செய்​தி​களை பிசிசிஐ முழு​வதும் மறுக்கிறது. இது யாரோ ஒரு​வரின் கற்​பனைச் செய்​தி​யாக இருக்கலாம். அணி​யின் தலை​மைப் பயிற்​சி​யாள​ராக கவுதம் கம்பீர் நீடிப்​பார்.இவ்​வாறு தேவஜித் சைக்​கியா தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT