விளையாட்டு

பாக். வீரரை சன்ரைசர்ஸ் ஏலத்தில் வாங்கியது குறித்து பிசிசிஐ ரியாக்‌ஷன் என்ன?

வேட்டையன்

மும்பை: அண்மையில் ‘தி ஹன்ட்ரட்’ 2026 சீசனுக்காக பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமதை ஏலத்தில் ஒப்பந்தம் செய்தது சன்ரைசர்ஸ் லீட்ஸ் ஃப்ரான்சைஸ். இந்நிலையில், அது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணைத் தலைவர் ராஜீவ் ஷுக்லா கருத்து தெரிவித்துள்ளார்.

“அது எங்கள் அதிகார வரம்பில் கீழ் இல்லை. அதை வெளிநாட்டு லீக் கிரிக்கெட்டில் அவர்கள் செய்துள்ளனர். அதில் நாங்கள் எதுவும் செய்வதற்கு இல்லை. அதனால் அது குறித்து அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என ராஜீவ் ஷுக்லா தெரிவித்தார்.

          

ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சன்ரைசர்ஸ் ஃப்ரான்சைஸ் கொண்டுள்ளது. இது சன் குழும நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ20 லீக், தி ஹன்ட்ரட் லீக் கிரிக்கெட்டிலும் இந்த ஃப்ரான்சைஸ் அணி பங்கு கொண்டுளள்து. தென் ஆப்பிரிக்காவில் சன்ரைசர்ஸ் கேப்டவுன், இங்கிலாந்தில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிகளை தனது உரிமையின் கீழ் சன்ரைசர்ஸ் கொண்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான அப்ரார் அகமதை 1.90 லட்சம் பவுண்டுகளுக்கு ஏலத்தில் வாங்கியது சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி. நடப்பு தி ஹன்ட்ரட் சீசனில் பங்கேற்று விளையாடும் 8 அணிகளில் 4 அணிகளை ஐபிஎல் கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

அந்த வகையில் இந்த அணிகள் ஏலத்தில் பங்கேற்றன. அதில்தான் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி அப்ரார் அகமதை ஒப்பந்தம் செய்தது. பாகிஸ்தான் வீரரை சன்ரைசர்ஸ் ஒப்பந்தம் செய்தது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் பிசிசிஐ தரப்பில் ராஜீவ் ஷுக்லா கருத்து தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT