சட்டோகிராம்: வங்கதேசம் - நியூஸிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி சட்டோகிராமில் நேற்று நடைபெற்றது.
முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது. நஜ்முல் ஹோசைன் ஷான்டோ 119 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் விளாசினார். லிட்டன் தாஸ் 91 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் சேர்த்தார். நியூஸிலாந்து அணி தரப்பில் வில் ரூர்க் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
பென் லிஸ்டர், ஜெய்டன் லெனாக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். 266 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 44.5 ஓவர்களில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டீன் பான்ஃகிராப்ட் 75, நிக் கெல்லி 59 ரன்கள் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் முஸ்டாபிஸுர் ரஹ்மான் 5 விக்கெட்களை வீழ்த்தினார். நஹித் ராணா, மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. முதல் ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2-வது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்திருந்தது.