லண்டன்: இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை (27-ம் தேதி) தொடங்கவுள்ள 2-வது டெஸ்ட் போட்டியில், பாபர் அசாம் களமிறங்குவது சந்தேகம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் போது பாபர் அசாமின் விரலில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது, கென்ட் நகரில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் அதே விரலில் மீண்டும் பந்து தாக்கியதால் பாபர் அசாமின் காயம் தீவிரமடைந்தது.
இதன் காரணமாக கடந்த வாரம் லீட்ஸ் நகரில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாபர் அசாம் விளையாடவில்லை. அப்போட்டியில் சல்மான் அலி ஆகா தலைமையில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டம் 3 நாட்களுக்குள் முடிவடைந்து இருந்தது.
விரலில் ஏற்பட்டுள்ள வீக்கம் காரணமாக பாபர் அசாமால் பேட்டை சரியாகப் பிடிக்க முடியவில்லை. இன்று நடைபெறும் வலைப்பயிற்சியில் பாபர் அசாம் பேட்டிங் செய்வதைப் பொறுத்தே அவர், 2-வது டெஸ்டில் விளையாடுவாரா? என்பது தெரியவரும்.