மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியன்களான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் 7-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் நடப்பு சாம்பியனும் முதல் நிலை வீரருமான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் 4-6, 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் 85-ம் நிலை வீரரான அமெரிக்காவின் எலியட் ஸ்பிஸ்ஸிரியை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
5-ம் நிலை வீரரான இத்தாலியின் லாரன்ஸோ முசெட்டி 5-7, 6-4, 6-2, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் 24-ம் நிலை வீரரான செக்குடியரசின் தாமஸ் மச்சக்கையும், 8-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-4, 6-4, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் 30-ம் நிலை வீரரான மொனாக்கோவின் வாலண்டைன் வச்செரோட்டையும், 22-ம் நிலை வீரரான இத்தாலியின் லூசியானோ டார்டெரி 7-6 (7-5), 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் 15-ம் நிலை வீரரான ரஷ்யாவின் கரேன் கச்சனோவையும் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
9-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் 7-6 (7-5), 2-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்காவை வீழ்த்தினார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் நடப்பு சாம்பியனும் 9-ம் நிலை வீராங்கனையுமான அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவையும், 4-ம் நிலை வீரராங்கனையான அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா 6-1, 6-4 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த பெய்டன் ஸ்டெர்ன்ஸையும் வீழ்த்தி 4-வது சுற்றில் கால்பதித்தனர்.
6-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் ஒக்ஸானா செலக்மெதேவாவையும், 21-ம் நிலை வீராங்கனையான பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டன்ஸ் 6-0, 6-4 என்ற செட் கணக்கில் செக்குடியரசின் நிகோலா பார்துங்கோவாவையும் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
16-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா, ஆஸ்திரேலியாவின் தகுதி நிலை வீராங்கனையான மேடிசன் இங்லிஸுடன் மோதுவதாக இருந்தார். ஆனால் காயம் காரணமாக நவோமி ஒசாகா விலகினார். இதனால் மேடிசன் இங்லிஷ் 4-வது சுற்றில் நுழைந்தார். 2-ம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-1, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் 31-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் அனா கலின்ஸ்கயாவை வீழ்த்தி 4-வது சுற்றில் நுழைந்தார்.
3-வது சுற்றில் பாம்ப்ரி ஜோடி: ஆடவர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் என்.ராம் பாலாஜி, ஆஸ்திரேலியாவின் நீல் ஓபர்லீட்னர் ஜோடி 5-7, 1-6 என்ற செட் கணக்கில் எல் சால்வடாரின் மார்செலோ அரேவலோ, குரோஷியாவின் மேட் பாவிக் ஜோடியிடம் தோல்வி அடைந்தது.
அதேவேளையில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, சுவீடனின் ஆண்ட்ரே கோரான்சன் ஜோடி 4-6, 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் மெக்சிகோவின் சாண்டியாகோ கோன்சலஸ், பிரான்ஸின் டேவிட் பெல் ஜோடியை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறியது.