பிரிஸ்பன்: ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும், இந்தத் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையையும் பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவுக்கு சென்று 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பனிலுள்ள காபா மைதானத்தில் கடந்த 4-ம் தேதி தொடங்கியது.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 334 ரன்களும், ஆஸ்திரேலியா 511 ரன்களும் குவித்தன. ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் 33, ஜேக் வெதரால்டு 72, லபுஷேன் 65, ஸ்டீவன் ஸ்மித் 61, கேமரூன் கிரீன் 45, அலெக்ஸ் கேரி 63, ஜோஷ் இங்லிஷ் 23, மிட்செல் ஸ்டார்க் 77, போலண்ட் 21 ரன்கள் சேர்த்தனர். இதனால் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 177 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை இங்கிலாந்து அணி விளையாடியது. இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 4-வது நாள் ஆட்டத்தை வில் ஜேக்ஸ் 4 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 4 ரன்களுடனும் தொடங்கினர்.
இருவரும் நிதானமாக விளையாடி ரன்களைச் சேர்க்க ஆரம்பித்தனர். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மிகவும் பொறுமையுடன் விளையாடி விக்கெட்டைக் காப்பாற்ற போராடினார். இந்நிலையில் வில் ஜேக்ஸ் 92 பந்துகளில் 41 ரன்கள் எடுத்திருந்தபோது, நேசர் பந்துவீச்சில், கேப்டன் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் வந்த கஸ் அட்கின்சன் 3, பிரைடன் கார்ஸ் 7 ரன்கள் எடுத்து வீழ்ந்தனர். பென் ஸ்டோக்ஸ் 50 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் 75.2 ஓவர்களில் 241 ரன்களுக்கு இங்கிலாந்தின் 2-வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் நேசர் 5, மிட்செல் ஸ்டார்க், போலண்ட் ஆகியோர் தலா 2, பிரண்
டன் டாகெட் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். இதையடுத்து 65 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்ஸை ஆஸ்திரேலிய அணி விளையாடியது.
டிராவிஸ் ஹெட்டும், ஜேக் வெதரால்டும் களமிறங்கினர். 22 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்தபோது கஸ் அட்கின்சன் பந்தில் டிராவிஸ் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த மார்னஸ் லபுஷேன் 6 பந்துகளில் 3 ரன்கள் சேர்த்த நிலையில் கஸ் அட்கின்சன் பந்தில், ஜேமி ஸ்மித்திடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தும், வெதரால்டும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி வெற்றி கண்டது.
வெதரால்டு 17 ரன்களும், ஸ்மித் 23 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
3-வது டெஸ்ட்: இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி வரும் 17-ம் தேதி அடிலெய்டில் தொடங்க உள்ளது.