விளையாட்டு

ஆஸ்திரேலிய அணி 511 ரன்கள் குவிப்பு: இங்கிலாந்து அணி தடுமாற்றம்

செய்திப்பிரிவு

பிரிஸ்பன்: ஆஷஸ் டெஸ்ட் கிரிக்​கெட் தொடரின் 2-வது போட்​டி​யில் ஆஸ்​திரேலிய அணி முதல் இன்​னிங்​ஸில் 511 ரன்​கள் குவித்​தது. தொடர்ந்து விளை​யாடிய இங்​கிலாந்து அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 134 ரன்​கள் எடுத்​தது.

பிரிஸ்​பனில் உள்ள காபா மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த டெஸ்​டில் முதல் இன்​னிங்​ஸில் இங்​கிலாந்து அணி 334 ரன்​கள் எடுத்​தது. அதி​கபட்​ச​மாக ஜோ ரூட் 138 ரன்​கள் எடுத்​தார். இதையடுத்து விளை​யாடிய ஆஸ்​திரேலிய அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 73 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 378 ரன்​கள் குவித்​தது.அலெக்ஸ் கேரி 46, மைக்​கேல் நேசர் 15 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் களத்​தில் இருந்​தனர். நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை ஆஸ்​திரேலிய அணி தொடர்ந்து விளை​யாடியது. மைக்​கேல் நேசர் 16 ரன்​களில் பென் ஸ்டோக்ஸ் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

இதன் பின்​னர் களமிறங்​கிய மிட்​செல் ஸ்டார்க் சீராக ரன்​கள் சேர்த்து அசத்​தி​னார். அலெக்ஸ் கேரி 69 பந்​துகளில், 6 பவுண்​டரி​களு​டன் 63 ரன்​கள் எடுத்த நிலை​யில் கஸ் அட்​கின்​சன் பந்​தில் வெளி​யேறி​னார். தனது 12-வது அரை சதத்தை கடந்த மிட்​செல் ஸ்டார்க் 141 பந்​துகளில், 13 பவுண்​டரி​களு​டன் 77 ரன்​கள் எடுத்த நிலை​யில் பிரைடன் கார்ஸ் பந்​தில் அவுட் ஆனார்.

மிட்​செல் ஸ்டார்க் சுமார் இரண்டரை மணி நேரம் களத்​தில் பேட் செய்​தார். 9-வது விக்​கெட்​டுக்கு ஸ்காட் போலண்ட், மிட்​செல் ஸ்டார்க் ஜோடி 75 ரன்​கள் சேர்த்​தது. கடைசி வீர​ராக பிரண்​டன் டாகெட் 13 ரன்​னில் நடையை கட்ட ஆஸ்​திரேலிய அணி 117.3 ஓவர்​களில் 511 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. கடைசி 4 விக்​கெட்​களுக்கு ஆஸ்​திரேலிய அணி 133 ரன்​கள் சேர்த்​தது.

ஸ்காட் போலண்ட் 21 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். இங்​கிலாந்து அணி தரப்​பில் பிரைடன் கார்ஸ் 4, பென் ஸ்டோக்ஸ் 3 விக்​கெட்​கள் வீழ்த்​தினர். ஜோப்ரா ஆர்ச்​சர், கஸ் அட்​கின்​சன், வில் ஜேக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர். ஆஸ்​திரேலிய அணி​யில் அனைத்து வீரர்​களும் இரட்டை இலக்க ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழந்​தனர். கிட்​டத்​தட்ட 150 ஆண்​டு​கால டெஸ்ட் கிரிக்​கெட்​டில் மூன்​றாவது முறை​யாக, 11 ஆஸ்​திரேலிய வீரர்​களும் ஒரு டெஸ்ட் இன்​னிங்​ஸில் இரட்டை இலக்க ரன்​களை எடுத்​துள்​ளனர்.

177 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய இங்​கிலாந்து அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 35 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 134 ரன்​கள் எடுத்​தது. ஸாக் கிராலி 44, பென் டக்​கெட் 15, ஆலி போப் 26, ஜோ ரூட் 15, ஹாரி புரூக் 15, ஜேமி ஸ்மித் 4 ரன்​களில் நடையை கட்​டினர். கேப்​டன் பென் ஸ்டோக்ஸ் 4, வில் ஜேக்ஸ் 4 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். ஆஸ்​திரேலிய அணி தரப்​பில் மிட்​செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், மைக்​கேல் நேசர் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். கைவசம் 4 விக்​கெட்​கள் இருக்க 43 ரன்​கள் பின்​தங்​கி​யுள்ள இங்​கிலாந்து அணி இன்​று 4-வது நாள்​ ஆட்​டத்​தை சந்​திக்​கிறது.

SCROLL FOR NEXT