பிரிஸ்பன்: ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2-வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 378 ரன்கள் குவித்தது. ஜேக் வெதரால்ட், மார்னஷ் லபுஷேன், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.
பிரிஸ்பனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 74 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 325 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் 135, ஜோப்ரா ஆர்ச்சர் 32 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி மேற்கொண்டு 9 ரன்களை சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தது.
ஜோப்ரா ஆர்ச்சர் 36 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்த நிலையில் பிரண்டன் டாகெட் வீசிய பந்தை டீப் பேக்வேர்டு ஸ்கொயர் திசையில் விளாசிய போது மார்னஷ் லபுஷேன் டைவ் அடித்து ஒற்றை கையால் கேட்ச் செய்து அசத்தினார். முடிவில் இங்கிலாந்து அணி 76.2 ஓவர்களில் 334 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜோ ரூட் 206 பந்துகளில், ஒரு சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 138 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி விக்கெட்டுக்கு இந்த ஜோடி 70 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்கள் வீழ்த்தினார். மைக்கேல் நேசர், பிரண்டன் டாகெட், ஸ்காட் போலண்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 73 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 378 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் 43 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்த நிலையில் பிரைடன் கார்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு டிராவிஸ் ஹெட், ஜேக் வெதரால்டு ஜோடி 13.1 ஓவர்களில் 77 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து களமிறங்கிய மார்னஷ் லபுஷேன், ஜேக் வெதரால்டுடன் இணைந்து சீராக ரன்கள் சேர்த்தார். தனது முதல் அரை சதத்தை கடந்த ஜேக் வெதரால்டு தாக்குதல் ஆட்டம் வாயிலாக விரைவாக ரன்கள் சேர்த்தார். சிறப்பாக பேட் செய்து வந்த அவர், 78 பந்துகளில், ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்த நிலையில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சீராக ரன்கள் சேர்த்து அழுத்தம் கொடுத்தார்.
25-வது அரை சதத்தை கடந்த மார்னஷ் லபுஷேன் 78 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித்திடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் களமிறங்கிய கேமரூன் கிரீன் 57 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்த நிலையில் பிரைடன் கார்ஸ் பந்தில் போல்டானார். தனது 44-வது அரை சதத்தை அடித்த ஸ்டீவ் ஸ்மித் 85 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்த நிலையில் பிரைடன் கார்ஸ் பந்தில் டீப் பேக்வேர்டு ஸ்கொயர் திசையில் வில் ஜேக்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஜோஷ் இங்லிஷ் 23 ரன்களில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் போல்டானார்.
அலெக்ஸ் கேரி 46, மைக்கேல் நேசர் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணி சார்பில் பிரைடன் கார்ஸ் 3, பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஜோப்ரா ஆர்ச்சர் ஒரு விக்கெட் கைப்பற்றினார். கைவசம் 4 விக்கெட்கள் இருக்க 44 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.
5 கேட்ச்கள் மிஸ்: பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் 2-வது நாளான நேற்று இங்கிலாந்து அணி வீரர்கள் 5 கேட்ச்களை தவறவிட்டனர். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் டிராவிஸ் ஹெட் 3 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் தவறவிட்டார்.
அலெக்ஸ் கேரி ரன் ஏதும் எடுக்காத நிலையில் பிரைடன் கார்ஸ்பந்தில் கொடுத்த எளிதான கேட்ச்சை பென்டக்கெட் கோட்டைவிட்டார். ஜோஷ் இங்லிஷ் 21 ரன்களில்இருந்த போது கொடுத்த கேட்ச்சை கல்லி திசையில் பென் டக்கெட் தவறவிட்டார். மைக்கேல் நேசர் 6 ரன்களில் இருந்த போது கவர் திசையில் கொடுத்த கேட்சை பிரைடன் கார்ஸ் நழுவவிட்டார். அலெக்ஸ் கேரி 25 ரன்கள் இருந்த போது கொடுத்த கேட்ச்சை முதல் சிலிப் திசையில் நின்ற ஜோ ரூட் தவறவிட்டார்.