டார்வினில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 198 ரன்களுக்குச் சுருண்டது, வங்கதேசத்தின் தொடக்க வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மஹ்முத் 55 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஆஸ்திரேலியா வங்கதேசத்துக்கு எதிராக ஆகக்குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதற்கு முன்பாக 217 ரன்களை எடுத்ததுதான் வங்கதேசத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவின் குறைந்த ரன்களாக இருந்தது.
ஹசன் மஹ்முத்தின் மூன்றாவது டெஸ்ட் ஐந்து விக்கெட் சாதனையுடன் அபார பந்துவீச்சால், டார்வின் டெஸ்டின் முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் வங்கதேசம் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக வீசினர்.
ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களான ஜேக் வெதரால்ட் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோராலும் நிலைத்து நிற்க முடியவில்லை. இருவரையும் மஹ்முத் வீழ்த்தினார். வெதரால்ட், வைட் பந்தை டிரைவ் செய்ய முயன்றபோது எட்ஜ் செய்து கேட்ச் கொடுத்தார். அதற்கு முன் இதேபோன்ற பந்துகளுடன் வேகமாக உள்நோக்கி வந்த பந்துகளையும் வீசி மஹ்முத் அவரை தொடர்ந்து சோதித்திருந்தார்.
டிராவிஸ் ஹெட்டும் மஹ்முத்தின் ரவுண்ட் த விக்கெட் பவுலிங் கோணத்தில் சிக்கினார். இன்னிங்ஸின் தொடக்கத்தில் கட்டுப்பாட்டுடன் விளையாடிய அவர், பின்னர் தளர்வான ஷாட்டில் மஹ்மூத் பந்தை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு பிளேய்ட் ஆன் ஆகி வெளியேறினார்.
எபாதத் ஹொசைனும் பேட்ஸ்மேன்களுக்கு அதிக இடம் கொடுக்காமல் சிறப்பாகப் பந்துவீசினார். மார்னஸ் லபுஷேனை குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழக்கச் செய்தார். இரண்டாவது ஸ்லிப்பில் நின்ற கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ சிறப்பான கேட்ச்சை பிடித்தார்.
முதல் செஷனின் முடிவிலும் வங்கதேசத்துக்கே ஆதிக்கம் இருந்தது. டாஸ்கின் அகமது வீசிய பந்தில் கேமரூன் கிரீன் மிட்விக்கெட் பகுதியில் கேட்ச் கொடுத்தார். அங்கு முஷ்பிகுர் ரஹிம் துல்லியமாக பாய்ந்து கேட்ச் பிடித்தார்.
ஆஸ்திரேலியாவின் சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கிய ஸ்டீவன் ஸ்மித்தை 71 ரன்களில் ஹசன் மஹ்முத் ஆட்டமிழக்கச் செய்தார். ஸ்டீவ் ஸ்மித் இறங்கியதுமே ஒரு கேட்ச் கொடுத்தார், ஆனால் ஸ்லிப்பில் அது தவற விடப்பட்டது, இவரை அப்போதே வீழ்த்தியிருந்தால் ஆஸ்திரேலியா 198 ரன்களைக் கூட எட்டியிருக்க முடியாது என்பதுதான் உண்மை.
109 பந்துகளில் 7 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் ஸ்மித் எடுத்த 71 ரன்கள், ஆஸ்திரேலியா மிகக் குறைந்த ஸ்கோரில் சுருண்டுவிடாமல் காப்பாற்றியது. ஸ்மித் ஆட்டமிழந்தபோது ஆஸ்திரேலியா 189 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அடுத்ததாக நாதன் லயனை மிட்விக்கெட் பகுதியில் கேட்ச் ஆகச் செய்து மஹ்முத் தனது ஆறாவது விக்கெட்டையும் கைப்பற்றி ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸை முடிவுக்குக் கொண்டுவந்தார்.
மஹ்முத் 55 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டாஸ்கின் அகமது மற்றும் எபாதத் ஹொசைன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் வேகப்பந்து வீச்சாளர்களே எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியது இரண்டாவது முறையாக அமைந்தது. இதற்கு முன்பு 2024-ல் ராவல்பிண்டியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் இந்த சாதனை நிகழ்ந்தது; அப்போது மஹ்முத் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். டார்வினில் மஹ்முத் எடுத்த 6 விக்கெட்டுகள், டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ஒருவரின் மூன்றாவது சிறந்த பந்துவீச்சு ஆகும்.
பந்துகள் எதிர்பாராத வகையில் ஸ்விங், பவுன்ஸ் ஆன கிரீன் டாப் ஆடுகளத்தில் சரியான லைன் மற்றும் லெந்த்தை தொடர்ந்து கடைப்பிடித்ததே வங்கதேச வேகப்பந்து வீச்சாளர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
ஸ்டீவன் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்தபோதுதான் ஆஸ்திரேலியா வலுவாகத் தெரிந்தது. இரண்டாவது செஷன் தொடக்கத்தில் சில பவுண்டரிகள் வந்தாலும், பின்னர் வங்கதேச பந்துவீச்சாளர்கள் ரன் வேகத்தை கட்டுப்படுத்தி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
டிரிங்ஸ் இடைவேளைக்குப் பிறகு எபாதத் வீசிய பந்து கேரியின் பேட்டின் உள் விளிம்பில் பட்டு விக்கெட்டுகளைத் தாக்கியது. கேரி 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் டாஸ்கின் அகமது, பியூ வெப்ஸ்டரை அருமையான பந்தில் பவுல்டாக்கினார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சற்று திசைமாறிய பந்து, வெப்ஸ்டரின் மட்டையைத் தாண்டி ஸ்டம்புகளைத் தாக்கியது.
அடுத்ததாக ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸை 9 ரன்களில் ஹசன் மஹ்முத் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுக்கச் செய்தார். அடுத்த ஓவரிலேயே மிட்செல் ஸ்டார்க்கும் அதே முறையில் மஹ்முத்திடம் ஆட்டமிழந்தார். இதன் மூலம் இரண்டாவது செஷனும் முழுமையாக வங்கதேசத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது.
இதன் மூலம் ஆஸ்திரேலியாவை முதல் நாளிலேயே 198 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வங்கதேசம் தனது வேகப்பந்து வீச்சின் வலிமையை வெளிப்படுத்தியுள்ளதோடு ஆஸ்திரேலியாவை கடும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. சற்று முன் வரை வங்கதேசம் தன் முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட்டை இழந்து 81 ரன்கள் எடுத்து வலுவாகச் சென்று கொண்டிருக்கிறது.