

புதுடெல்லி: உத்தராகண்ட்டின் ஹல்திவானியில் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்ற நிகழ்ச்சி நடந்த இடத்தில் ‘சுத்திகரிப்பு’ சடங்கு நடந்தது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று மாநிலங்களவையில் ஜே.பி. நட்டா உறுதி அளித்துள்ளார்.
உத்தராகண்ட்டின் ஹல்திவானியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் கடந்த 8-ம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் அந்த இடம் ‘சுத்திகரிப்பு’ செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. பாஜகவுடன் தொடர்புடைய ஸ்ரீராம் சேனா என்ற அமைப்பே இதைச் செய்ததாக உத்தராகண்ட் காங்கிரஸ் தலைவர் கணேஷ் கோடியல் குற்றம் சாட்டி இருந்தார்.
மல்லிகார்ஜுன கார்கே தலித் என்பதால் இந்தச் சடங்கு நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட கணேஷ் கோடியல், சாதியின் பெயரால் சமூகத்தில் பிளவுகளை பாஜக உருவாக்குவதாகக் குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தை மாநிலங்களவையில் எழுப்பிய மல்லிகார்ஜுன கார்கே, “இந்தச் சடங்கு மனித குலத்துக்கு எதிரான குற்றம். காங்கிரஸ் மற்றும் பாஜக இடையிலான அடிப்படைக் கொள்கை வேறுபாட்டை இது பிரதிபலிக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக நைனிடால் மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரியவில்லை. தீண்டாமைக்குச் சமமான இந்தச் செயலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இதுவே எனது கோரிக்கை” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய மத்திய அமைச்சரும் அவைத் தலைவருமான ஜே.பி. நட்டா, “இத்தகைய சம்பவங்களை பாஜக ஆதரிப்பதில்லை. இது கண்டிக்கத்தக்கது. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் இந்த விவகாரத்தை தீவிரமாகக் கவனிப்பார்.
விசாரணையில், இந்த சம்பவத்துக்குக் காரணமானவர்கள் கண்டறியப்படுவார்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எக்கப்படும். இந்த விவகாரத்தை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்ய வேண்டாம், என்று கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டார்.
அப்போது பேசிய மாநிலங்களவைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், “தீண்டாமை என்பது ஒரு பாவம். கட்சி அல்லது கொள்கை வேறுபாடின்றி நாம் அனைவரும் இதைக் கண்டிக்கிறோம். நாம் அனைவரும் தூய்மையானவர்களே; நம்மை சுத்திரிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த விகாரம் குறித்து விசாரணை நடத்துமாறும், காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை” எனத் தெரிவித்தார்.