விளையாட்டு

வங்கதேசத்தை இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்களில் வீழ்த்தியது ஆஸி: மெக்கே டெஸ்ட்

ஒன்றரை நாளில் முடிந்த ஆட்டம்

வேட்டையன்

மெக்கே: இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் வங்கதேச அணியை இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்களில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி.

மெக்கேவில் உள்ள கிரேட் பேரியர்ஸ் ரீஃப் மைதானத்​தில் நேற்று தொடங்கியது இந்த ஆட்டம். இதில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 34 ஓவர்களில் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 210 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

முதல் இன்னிங்ஸில் 146 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை வங்கதேசம் தொடங்கியது. இந்த இன்னிங்ஸில் வங்கதேசம் கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த அணியின் கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 31 மற்றும் முஷ்பிகுர் ரஹீம் 29 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். அதில் மூன்று பேர் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர்.

முதல் இன்னிங்ஸை போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க். முதல் இன்னிங்ஸில் 6, இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தார். கம்மின்ஸ் மற்றும் நேதன் லயன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 36.3 ஓவர்களில் 95 ரன்கள் எடுத்து சுருண்டது. அதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்களில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

முன்னதாக, இரண்டு ஆட்டங்கள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வங்கதேசம் வீழ்த்தி இருந்தது. இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதன் மூலம் 1-1 என்ற கணக்கில் இந்த தொடர் சமனில் முடிந்தது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை ஸ்டார்க் வென்றார்.

ஒன்றரை நாளில் முடிந்த ஆட்டம்

இந்த ஆட்டத்தில் வெறும் ஒன்றரை நாட்களில் 30 விக்கெட்டுகள் வீழ்ந்தன. மொத்தமாக 369 ரன்கள் மட்டுமே இரண்டு அணிகளும் இணைந்து பதிவு செய்தன. மொத்தம் 750 பந்துகள் இதில் வீசப்பட்டன. வழக்கமாக இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் குறுகிய நாட்களில் முடிவுக்கு வந்தால் அது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் கேள்வி எழுப்புவது உண்டு.

SCROLL FOR NEXT