மெர்பர்ன்: 2026-ம் ஆண்டு ஐபிஎல் சீசன் போட்டிகள் வரும் 28-ம் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்தத் தொடரின் பல்வேறு அணிகளில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர்.
சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்த நேதன் எல்லிஸ் தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒட்டுமொத்த சீசனில் இருந்தும் விலகியுள்ளார். இது ஒருபுறம் இருக்க வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கவுள்ள பிஸியான கால அட்டவணையைக் கருத்தில் கொண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது வேகப்பந்து வீச்சாளர்களின் காயங்கள் தொடர்பான விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகிஉள்ளன.
ஏனெனில் அடுத்த 12 மாத காலத்தில் ஆஸ்திரேலிய அணி 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதனால் பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது என்பது, அடுத்த சில வாரங்களில் அவர்களுடைய உடற்தகுதி முன்னேற்றத்தைப் பொறுத்தே அமையும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த கோடையில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடினார். அதே சமயம், ஹேசில்வுட் தொடைப்பகுதி மற்றும் கணுக்கால் பிரச்சினைகள் காரணமாக ஆஷஸ் தொடர் முழுவதையும் தவறவிட்டார். இவர்கள் இருவரும் டி 20 உலகக் கோப்பை தொடரிலும் பங்கேற்கவில்லை.
மிட்செல் ஸ்டார்க் ஆஷஸ் தொடரின் 5 ஆட்டங்களிலும் விளையாடினார். மேலும் பிக்பாஷ் டி 20 தொடரிலும் பங்கேற்றார். ஆனால் சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் இருந்து அவர், ஓய்வு பெற்றுவிட்டதால் உலகக் கோப்பையில் விளையாடவில்லை. ஐபிஎல் தொடரில் பாட் கம்மின்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலும், ஜோஷ் ஹேசில்வுட் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலும், மிட்செல் ஸ்டார்க் டெல்லி கேப் பிடல்ஸ் அணியிலும் இடம் பெற்றுள்ளனர்.
கேகேஆர் அணியில் ராணா விலகல்
ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசன் போட்டிகள் வரும் 28-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி தனது முதல் ஆட்டத்தில் 29-ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் கேகேஆர் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா, தசைநார் காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் இந்த சீசனில் இருந்து முழுமையாக விலகி உள்ளார்.
ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடிய போது ஹர்ஷித் ராணாவின் வலது முழங்காலில் தசைநார் கிழிவு ஏற்பட்டது. இந்த காயத்துக்காக அவர், கடந்த மாதம் அறுவை சிகிச்சை செய்திருந்தார். இதனால் ஹர்ஷித் ராணா தற்போது நீண்ட கால உடற்பயிற்சி மற்றும் காயத்தில் இருந்து முழுமையாக மீண்டுவருவதற்கான சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனாலேயே ஐபிஎல் தொடரில் அவர், விலகியுள்ளார்.