ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா.
அடிலெய்டு: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி 20 போட்டி நேற்று அடிலெய்டு நகரில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது.
தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 55 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் விளாசினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 46 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 2-வதுவிக்கெட்டுக்கு 82 பந்துகளில் 121ரன்கள் குவித்து அசத்தியது.
ஷபாலி வர்மா 7, ரிச்சா கோஷ் 18 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத்கவுர் 4 பந்துகளில் 2 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய மகளிர் அணிதரப்பில் அனாபெல் சுதர்லேண்ட் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
177 ரன்கள் இலக்குடன்பேட் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக ஆஷ்லே கார்ட்னர் 57, ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 26 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் ஸ்ரேயங்கா பாட்டீல், சரணி ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர். 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வென்றது.
முதல் ஆட்டத்தில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தன. 2016-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மகளிர் அணி தற்போதுதான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை வென்றுள்ளது.