அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள காந்தி நகரில் நாளை (11-ம் தேதி) ஆசிய சீனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்குகிறது. வரும் 17-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 30 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்தியா உட்பட 28 ஆசிய நாடுகளைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர்களுடன், சிறப்பு விருந்தினர் நாடுகளாக ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் இதில் பங்கேற்க உள்ளனர். எனினும், இந்தியாவின் நட்சத்திர பளுதூக்குதல் வீராங்கனையும், ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான சாய்கோம் மீராபாய் சானு, காயம் காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய சீனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியானது கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றாக அமையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய சீனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா, சீனா, வட கொரியா, தென் கொரியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மேனிஸ்தான், ஜப்பான், ஈரான், வியட்நாம், இலங்கை, வங்கதேசம் மற்றும் பல மேற்கு ஆசிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
போர்ச் சூழல் காரணமாக ஈரானில் இருந்து இரண்டு வீரர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர். மற்ற சில மத்திய கிழக்கு நாடுகளும் தங்களது வீரர்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளன. இந்தத் தொடரில் 102 வீரர்கள், 77 வீராங்கனைகள் என மொத்தம் 179 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 6 வெற்றியாளர்கள், உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற 35 பேர், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற 10 பேரும் பங்கேற்கின்றனர். இவர்கள் தவிர, பல காமன்வெல்த் போட்டிகள் மற்றும் பிராந்திய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களும் களமிறங்குகின்றனர்.
இந்தியாவில் இருந்து 8 வீரர்கள், 8 வீராங்கனைகள் என மொத்தம் 16 பேர் கொண்ட வலுவான அணி களமிறங்குகிறது. உலக பளுதூக்குதலில் பலமாக உள்ள சீனா 8 வீரர்கள், 8 வீராங்கனைகளை கொண்ட அணியை அனுப்பி உள்ளது. அதேபோல் வடகொரியா 11 வீரர்களுடன் பங்கேற்கிறது. தென் கொரியா, சீன தைபே மற்றும் இலங்கை ஆகிய நாடுகளும் கணிசமான எண்ணிக்கையிலான வீரர்களைக் களமிறக்குகின்றன.