நிங்க்போ: சீனாவின் நிங்க்போ நகரில் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் உலகத்தரவரிசையில் 25-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, 20-வது இடத்தில் உள்ள சீன தைபேவின் ஷி யு ஜென்னுடன் மோதினார். இதில் ஆயுஷ் ஷெட்டி 21-16, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
கால் இறுதி சுற்றில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டியுடன் மோதுகிறார் ஆயுஷ் ஷெட்டி. அதேவேளையில் மற்றொரு இந்திய வீரரான ஹெச்.எஸ்.பிரனாய் 12-21, 19-21 என்ற செட் கணக்கில் சீனாவன் வெங் ஹாங் யங்கிடம் தோல்வி அடைந்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் ஒலிம்பிக்கில் இருமுறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து 18-21, 8-21 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் வாங் ஷியி-யிடம் தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் 46 நிமிடங்களில் முடிவடைந்தது. மற்றொரு இந்திய வீராங்கனையான உன்னதி ஹூடா 17-21, 9-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் டோமோகா மியாஸாகியிடம் தோல்வி அடைந்தார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிரஸ்டோ ஜோடி 13-21, 14-21 என்ற செட் கணக்கில் மலேசியாவின் சென் டங் ஜி, தோஹ் இ வெய் ஜோடியிடம் வீழ்ந்தது.