பிரிஸ்பன்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான பாரம்பரியமிக்க 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பனில் உள்ள தி காபா மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. பகலிரவு டெஸ்ட் போட்டி என்பதால் பிங்க் பந்து பயன்படுத்தப்பட உள்ளது. காபா மைதானத்தில் இதுவரை ஆஸ்திரேலிய அணி 14 பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13-ல் வெற்றி பெற்றுள்ளது.
இது ஒருபுறம் இருக்க காபா மைதானத்தில் இங்கிலாந்து அணி 1986-ம் ஆண்டுக்கு பிறகு ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது கிடையாது. மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் 2010-11ம் ஆண்டு தொடருக்கு பின்னர் இங்கிலாந்து அணி ஒரு டெஸ்டில் கூட வெற்றி பெற்றது இல்லை.