ஜெருசலேம்: இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் ஜெருசலேம் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், சகநாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசியுடன் மோதினார்.
முதலில் இவர்கள் விளையாடிய ரேப்பிடு போட்டியின் முதல் ஆட்டம் 58-வது நகர்த்தலின் போதும், 2-வது ஆட்டம் 30-வது நகர்த்தலின்போதும் டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் நடத்தப்பட்டது. பிளிட்ஸ் ஆட்டமான இதில் முதல் போட்டியில் அர்ஜுன் எரிகைசி 45-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.
தொடர்ந்து நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் அர்ஜுன் எரிகைசி வெற்றி பெறும் சூழ்நிலையில் இருந்த போதிலும் 36-வது நகர்த்தலில் டிரா செய்தார். முடிவில் அர்ஜுன் எரிகைசி 2.5-1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜுன் எரிகைசிக்கு ரூ.49.42 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.