ஆசிய விளையாட்டு குத்துச்சண்டையில் ஆடவருக்கான 80 கிலோ எடைப் பிரிவு அரை இறுதி சுற்றில் இந்தியாவின் அங்குஷ் பங்ஹால் 4-1 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் ஃபஸ்லித்தின் எர்கின்போயேவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இதன் மூலம் ஆசிய விளையாட்டு குத்துச்சண்டையில் ஆடவர் பிரிவில் 8 வருடங்களுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் அங்குஷ் பங்ஹால். கடைசியாக 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அமித் பங்ஹால் இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
மகளிருக்கான 65 கிலோ எடைப் பிரிவு அரை இறுதி சுற்றில் இந்தியாவின் பர்வீன் ஹூடா 5-0 என்ற கணக்கில் சீனாவின் லி ஷு-வை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் ஆசிய விளையாட்டு குத்துச்சண்டை வரலாற்றில் மகளிர் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய 3-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை பர்வீன் ஹூடா பெற்றார். இதற்கு முன்னர் கடந்த 2014-ல் மேரி கோம் இறுதிப் போட்டிக்கு முன்னேறி தங்கம் வென்றிருந்தார். 2023-ல் லவ்லினா போர்கோஹைன் வெள்ளி கைப்பற்றியிருந்தார்.
அதேவேளையில் ஆடவருக்கான +90 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நரேந்தர் பெர்வால் 0-5 என்ற கணக்கில் கஜகஸ்தானின் ஐபெக் ஓரல்பேவிடம் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றார். ஆசிய விளையாட்டு போட்டியில் நரேந்தர் பதக்கம் கைப்பற்றுவது இது 2-வது முறையாகும். கடந்த 2023-ம் ஆண்டு ஹாங்சோ ஆசிய விளையாட்டிலும் நரேந்தர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.